புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபான விலை உயர்வு, உடனடியாக அமலுக்கு வந்தது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.185 கோடி அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
புதுவையில் கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றைச் செயல்படுத்த அரசுக்கு கூடுதலாக சுமார் ரூ.500 கோடி தேவைப்படுகிறது. இதனால் அரசின் வருவாயைப் பெருக்க வேண்டிய கட்டாயச் சூழல் எழுந்துள்ளது.
இதையடுத்து முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், மக்களுக்கு சுமையின்றி, அரசின் வருவாயைப் பெருக்க முடிவு எடுக்கப்பட்டது. அந்த வகையில், மது வகைகளுக்கு கலால் வரி, மதுக்கடைகளுக்கு உரிமக் கட்டணம், நில வழிகாட்டி மதிப்பு ஆகியவற்றை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், மதுபானங்களுக்கான கூடுதல் கலால் வரி விதிப்பு குறித்து அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கலால்துறை தரப்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "புதுச்சேரியில் ஐஎம்எஃப்எல், பீர், ஓயின் மீதான கலால் வரி மற்றும் கூடுதல் கலால் வரி நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசு அறிவிப்பு கலால்துறை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த உயர்வின் மூலம் ஐஎம்எஃப்எல் 750 மி.லி மதுபான பாட்டில்களுக்கு ரூ.10 முதல் ரூ. 47 வரையிலும், 180 மி.லி பாட்டில்கள் ரூ.3 முதல் ரூ.11 வரையிலும் பீர் 650 மி.லி பாட்டிலுக்கு ரூ.6 முதல் ரூ.7 வரையிலும், ஓயின் 750 மி.லி பாட்டிலுக்கு ரூ.13 முதல் ரூ.26 வரையும் உயரும். இந்த வரி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.185 கோடி கூடுதல் வருவாய் வரும்.
மேலும் மதுபான தொழிற்சாலை, மதுபான மொத்த மற்றும் சில்லறை விற்பனைக்கான உரிமக் கட்டணம் ஏற்றுமதி, இறக்குமதி மீதான கட்டணமும் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பும் இணையத்தில் வெளியாகியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபான கடைகளுக்கு எச்சரிக்கை: விலை உயர்வு தொடர்பாக சட்டமுறை எடையளவு அலுவலக கட்டுப்பாட்டு அதிகாரி தரப்பில் கேட்டதற்கு, "புதுச்சேரி அரசு மதுபான விற்பனை விலையை உயர்த்தியுள்ளது. மதுபானக்கடை உரிமையாளர்கள் 28-ம் தேதி முதல் கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களை மட்டுமே புதிய விலைக்கு விற்க முடியும்.
ஏற்கெனவே கொள்முதல் செய்த மதுபானங்களை பழைய எம்ஆர்பி விலைக்கே விற்பனை செய்ய வேண்டும். மாறாக பழைய மதுபானங்களை புதிய விலைக்கு விற்பனை செய்யும் மதுபான கடைகளுக்கு புதுச்சேரி சட்டமுறை எடையளவை அமலாக்க விதிகள்படி அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும். இதில் புகார்கள் இருந்தால் 0431 - 2262090 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்" என்று தெரிவித்தனர்.