தமிழகம்

மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு - கூட்டணியில் கமலுக்கு வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் பி.வில்சன், சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்றும், கூட்டணியில் கமலின் மக்கள் நீதிமையத்துக்கு ஒரு இடம் வழங்கப்படுவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகம் சார்பில் மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள வைகோ, பி.வில்சன், எம்.சண்முகம், எம்.முகமது அப்துல்லா, அன்புமணி ராமதாஸ், என்.சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 27-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், இந்த 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தலை, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட உள்ளவர்கள் குறித்த அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். அதில், ‘‘ஜூன் 19-ம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 4 இடங்களில், 3 இடங்களுக்கு திமுக வேட்பாளர்கள், மீதமுள்ள ஒரு இடம் ஏற்கெனவே செய்யப்பட்ட ஒப்பந்தப்படி மக்கள் நீதி மய்யத்துக்கு ஒதுக்கப்படுகிறது. திமுக வேட்பாளர்களாக, பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் என்ற கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள்’’ என அறிவித்துள்ளார்.

இதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவின் பெ.சண்முகம், முகமது அப்துல்லாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதே நேரம், பல்வேறு வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட பி.வில்சனுக்கு திமுக தலைமை மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது. சிறுபான்மையினர் அடிப்படையில் கவிஞர் சல்மா வாய்ப்பை பெற்றுள்ளார்.

இதில், பி.வில்சன், 2019 முதல் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், தமிழக கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும் பணியாற்றியவர்.

மற்றொரு போட்டியாளரான எஸ்.ஆர்.சிவலிங்கம், கட்சியின் 40 ஆண்டு கால களப்பணியாளர். 2022 முதல் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளராக உள்ளார். 1989, 1996-ல் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். கடந்த மக்களவைத் தேர்தலின்போது கள்ளக்குறிச்சியில் போட்டியிட கட்சி தலைமையிடம் வாய்ப்பு கேட்டார். அப்போது சீட் மறுப்பட்டிருந்த நிலையில் தற்போது மாநிலங்களவையில் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளார்.

அதே போல், மாநிலங்களவை எம்.பி.யாக வாய்ப்பு பெற்றுள்ள ரொக்கையா மாலிக் என்ற கவிஞர் சல்மா, நீண்டகாலமாக திமுகவில் பணியாற்றி வருகிறார். தமிழ்நாாடு சமூக நலவாரிய தலைவராக பணியாற்றியவர். திருச்சி மாவட்டம் பொன்னாம்பட்டி பேரூராட்சி தலைவராக இருந்த சல்மா, 2006-ல் திமுக சார்பில் மருங்காபுரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவரது படைப்புகள் அர்மீனியன் உள்ளிட்ட பல்வேறு உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT