தமிழகம்

கரோனா தொற்றால் சென்னையில் முதியவர் உயிரிழப்பு: தமிழகம் முழுவதும் 69 பேர் பாதிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் கரோனா தொற்றால் 65 வயது முதியவர் உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் கரோனா தொற்றால் 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தொற்று இந்தியா உட்பட உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியது.

கடந்த 2023-ல் கரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிருவர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். கடந்த ஜனவரியில் தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு பூஜ்ஜிய நிலையை எட்டியது. பின்னர், அவ்வப்போது ஓரிருவர் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் மீண்டும் கரோனா தொற்றின் புதிய வகை வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர், ஜப்பான், சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தொற்று பாதிப்புகள் அதிகமாக பதிவாகி வருகிறது. தமிழகத்தில் 69 பேர் உட்பட நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றின் தீவிரத்தால் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் முதியவர் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதன் விவரம்: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அடுத்த சட்டமங்கலம் பகுதியில் வசித்து வந்தவர் ஜோசியர் மோகன் (65). சிறுநீரக செயலிழப்புக்கு சிகிச்சை பெறுவதற்காக, அவர் கடந்த 15-ம் தேதி சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பாதிப்பும் அவருக்கு இருந்தது. அதனுடன், கடந்த 26-ம் தேதி காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சினையும் இருந்ததால் அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் வந்த பரிசோதனை முடிவில், அவருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு, கரோனா நோயாளிகளுக்கான தனி டயாலிசிஸ் பிரிவு இல்லாததால், மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் மாலை ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக தமிழக பொது சுகாதார துறை மற்றும் சென்னை மாநகராட்சிக்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது. பின்னர், உறவினர்களின் சம்மதத்துடன் கரோனா பாதுகாப்பு நடைமுறைகளின்படி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT