சென்னை: மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு-நிர்வாகக்குழு கூட்டத்தில் ஏகமனதாக முடிவுசெய்யப்பட்டது.
சென்னையில் நேற்று நடைபெற்ற இக்கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் தலைமை தாங்கினார். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது திமுகவுடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஓர் இடம் ஒதுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் ஜூன் 19-ம் தேதி நடைபெறும் 6 தமிழக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் கட்சியின் வேட்பாளராக தலைவர் கமல்ஹாசனை நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு ஏகமனதாக முடிவுசெய்து அறிவிக்கிறது.
மாநிலங்களவைத் தேர்தலில் மநீம வேட்பாளருக்கு மேலான ஆதரவை அளிக்குமாறு திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளை மநீம நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கமல்ஹாசனின் மநீம திமுக கூட்டணியில் இருந்து வருகிறது. தமிழகத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 4 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதில் ஒரு இடம் கமல்ஹாசனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மநீம கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்க விழாவில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே உரையாற்றிய கமல்ஹாசன், இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் மநீம கட்சியின் குரல் ஒலிக்கும். அடுத்த ஆண்டு சட்டப்பேரவையில் ஒலிக்கும் என்று பேசியது குறிப்பிடத்தக்கது.
அதன்படி விரைவில் மாநிலங்களவை உறுப்பினர் ஆக உள்ள நிலையில் 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணியில் தனது கட்சிக்கு கணிசமான இடங்களை கேட்டுப்பெறக்கூடும். கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. தற்போது திமுக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராகும் கமல்ஹாசனை 2026 சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுத்த திமுக திட்டமிட்டுள்ளது.