கமல்ஹாசன் | கோப்புப்படம் 
தமிழகம்

கன்னட மொழி குறித்த சர்ச்சைப் பேச்சு: கமலை எம்.பி.யாக தேர்வு செய்ய இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு

கி.மகாராஜன்

மதுரை: “திரைப்பட விழாவில் தமிழ்- கன்னட மொழி குறித்து சர்ச்சையாக பேசிய கமலை மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்ய வேண்டாம்,” என திமுகவுக்கு இந்து மக்கள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சோலை கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என பேசியது தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக எழுந்துள்ளது. திரைப்பட விழாவில் சம்பந்தம் இல்லாமல் தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என கன்னட மக்களை புண்படுத்தும் விதமாகவும், இரு மாநில சமூக அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும் மொழி பிரச்சினையை உண்டாக்கும் விதமாகவும் திட்டமிட்டு பேசிய கமலை கண்டிக்கிறோம்.

கமல் நடித்துள்ள ‘தக்லைஃப்’ என்ற பெயரே தமிழ் அல்ல. அவரது பெயரே தமிழ் இல்லை. யாரை ஏமாற்ற மொழிப் பிரச்சினை நாடகத்தை கமல் தூண்டுகிறார். ஒவ்வொரு மாநில மக்களும் தங்கள் மாநில மொழி முக்கிய மொழி என கருதுகின்றனர். அப்படியிருக்கும் போது தனது திரைப்படம் நன்றாக ஓட வேண்டும் என்ற சுயலாபத்துக்காக கன்னட -தமிழக மக்களிடையே பதற்றம், கலவரம் மற்றும் மொழிப் பிரிவினையை தூண்டும் விதமாகவும் பேசிய நடிகர் கமல் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கமல் பேச்சால் இரு மாநில மக்களுக்கிடையே பிரச்சினைகள் ஏற்படுவதை தடுத்து, இரு மாநில மக்களிடையே அமைதியை நிலை நாட்டும் வகையில் தமிழகஅரசும் கர்நாடக அரசும் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது திரைப்படத்துக்காக மொழிப் பிரச்சினையை ஏற்படுத்தும் கமல் மாநிலங்கவை உறுப்பினராவதற்கு தகுதியற்றவர். எனவே அவரை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்வதை திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT