தமிழகம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு உலகளாவிய சுற்றுச்சூழல் சிறப்பு விருது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு `உலகளாவிய சுற்றுச்சூழல் சிறப்பு நிறுவனம்' என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை சார்பில், உலக எரிசக்தி தலைவர்கள் மாநாடு புதுடெல்லியில் உள்ள ரோஸேட் ஹவுஸ் ஏரோசிட்டியில் அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், 2025-ம் ஆண்டுக்கான உலகளாவிய சுற்றுச்சூழல் சிறப்பு நிறுவனம் என்ற விருது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக்கிடம் காண்பித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தலைமை ஆலோசகர் ராஜீவ் கே.ஸ்ரீவஸ்தவா வாழ்த்துப் பெற்றார். இந்நிகழ்வில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் உடனிருந்தார்.

இந்த உலக சுற்றுச்சூழல் சிறப்பு விருது, மாற்றத்தை உருவாக்கி, அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க உதவும் மிகச்சிறந்த நிறுவனங்கள், தலைவர்கள் மற்றும் அவர்களின் குழுக்களை கவுரவிக்கிறது.

சுற்றுச்சூழல் மேம்பாடு: காற்றின் தரத்தை மேம்படுத்துதல், வளப் பாதுகாப்பு, சூரிய மின்சக்தி பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் ரீதியான பசுமையான தோட்டங்களை வளர்த்து சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துதல் போன்ற முயற்சிகளுக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனித்து நிற்கிறது. இந்த விருதைப் பெற்ற ஒரே மெட்ரோ நிறுவனம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகும். இத்தகவல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT