தமிழகம்

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்: தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்டதாக விஜய் கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை, முல்லை நகர் பகுதியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய தவெக நிர்வாகிகள் போலீஸாரால் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள தவெக விஜய், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர் பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தவெகவினர் நிவாரணப் பொருட்களை வழங்கினர். போலீஸார் இதைத் தடுத்ததோடு, அத்துமீறி செயல்பட்டுள்ளனர். அதைக்கண்டு தவெக மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கங்காவதி(45), மக்களுக்கு உதவி செய்வதைத் தடுப்பது ஏன்? என போலீஸாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போது போலீஸார் ஈவு இரக்கமின்றி, அவரை வயிற்றில் எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளனர். இதைத் தடுக்கச் சென்ற மகளிரணியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வியின் ஆடையைக் காவல் துறையினர் பிடித்து இழுத்து தள்ளி விட்டுள்ளனர்.

தீவிபத்தில் பாதிக்கப்பட்டு, நிர்கதியாய் நிற்கும் மக்களுக்கு உதவுவது என்பது, காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய மாபெரும் குற்றச் செயலா? பெண் நிர்வாகிகளை பூட்ஸ் காலால் வயிற்றில் எட்டி உதைப்பதையும், ஆடை கிழியும் அளவுக்கு அவர்களை இழுத்துத் தள்ளி விடும் காவல் துறையின் செயலை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்கிறாரா? தற்போது தமிழகத்தில் நடப்பது பாசிச ஆட்சியே என்பதற்கு இதைவிட சாட்சி தேவையா?

மக்களுக்கான ஆட்சி நடத்துகிறோம் என்று வெற்று விளம்பரம் செய்யும் மு.க.ஸ்டாலின் அரசின், இந்தக் காட்டுமிராண்டித்தனமான அராஜகப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். தவறிழைத்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, பெண்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களை வீதியில் போராட வைத்திருக்கிறது.

இந்நிலை தொடர்ந்தால், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மிகப் பெரிய மக்கள் போராட்டத்தையும் சட்டப் போராட்டத்தையும் முன்னெடுக்கத் தயங்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT