தமிழகம்

பழனிசாமிக்கு பதில் சொல்லி என் தரத்தை தாழ்த்த விரும்பவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: ‘எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லி என் தரத்தை நான் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பங்கேற்றார். கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, செய்தியாளர்கள் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்கள் வருமாறு:

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உங்களது டெல்லி பயணத்தை தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறாரே? - அவருக்கு இந்த ஆட்சியைப் பற்றி குறைசொல்ல எதுவும் கிடைக்கவில்லை. அதனால், திரும்பத் திரும்ப அரைச்ச மாவை அரைப்பதுபோல் குறைகூறி வருகிறார். அதற்கு நான் பதில் சொல்லி என் தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை.

நான் வெள்ளைக் கொடியை கொண்டு சென்றதாகக் கூறினார். வெள்ளைக் கொடியோ, காவிக் கொடியோ நான் கொண்டு செல்லவில்லை என்று தெளிவாகக் கூறிவிட்டேன்.

அரக்கோணம் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, இந்த ஆட்சி முடியும் வரை, மக்கள் அவர்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று எதிர்க் கட்சித்தலைவர் பழனிசாமி கூறியுள்ளாரே? - அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம், தூத்துக்குடி என பல்வேறு சம்பவங்கள் உள்ளன. அதெல்லாம் எடுத்துச்சொல்ல நேரம் போதாது. இவற்றையெல்லாம் வீம்புக்காக சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு முதல்வர் பதிலளித்தார்.

SCROLL FOR NEXT