தமிழக சட்டம் - ஒழுங்கு குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை மேற்கொண்டார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாகவும், கொலைகள் நடப்பதாகவும், சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த விவகாரத்தில் அனைத்து மாவட்ட போலீஸாரும் அதிக கவனம் செலுத்தி குற்றம் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார். அதன் தொடர்ச்சியாக போலீஸ் அதிகாரிகளுடன் தனது அலுவலகத்தில் டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று காலை ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் மற்றும் சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் ஆணையர் அலுவலக அதிகாரிகள் பங்கேற்றனர். மாவட்ட போலீஸ் அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு, பாலியல் விவகாரம், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களை முற்றிலும் தடுப்பது தொடர்பாக விரிவான ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.