தமிழகம்

கனமழை காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு!

என்.கணேஷ்ராஜ்

குமுளி: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, முல்லைப் பெரியாறு அணையில் ஒரே நாளில் 3 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்னதாகவே தொடங்கி விட்டது. இதனால் கடந்த ஒரு வாரமாக தமிழக - கேரள எல்லையில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைக்கான நீர் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 23-ம் தேதி விநாடிக்கு 100 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று (மே 26) 1,648 கனஅடியாக உயர்ந்தது.

இந்நிலையில், இன்று (மே 27) 5,300 கனஅடியாக அதிகரித்தது. பிற்பகல் முதல் தொடர்ந்து இதன் அளவு உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் நேற்று 115.65 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 118.70 அடியாக உயர்ந்தது. ஒரேநாளில் அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வைகை அணையைப் பொறுத்தளவில் நேற்று 34 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 426 கனஅடியாக அதிகரித்தது. நேற்று 52.81அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 53 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் சோத்துப்பாறை, சண்முகாநதி, மஞ்சளாறு உள்ளிட்ட பல்வேறு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி தேக்கடியில் அதிகபட்சமாக 105.6 மி.மீ. மழையும், பெரியாறு அணையில் 101.6 மி.மீ மழையும் பெய்துள்ளது. இதேபோல் சண்முகாநதி அணையில் 21.4 மி.மீ, கூடலூரில் 15.6 மி.மீ மழை அளவும் பதிவாகி உள்ளது.

SCROLL FOR NEXT