கோவை: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை தொடர்வதால் 3-வது நாளாக இன்றும் (மே 27) பில்லூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால், பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.சிறுவாணி அணையின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
தென்மேற்கு பருவ மழைக் காலத்தையொட்டி, கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்தது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மலைப் பகுதிகளில், பில்லூர் மற்றும் சிறுவாணி அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பில்லூர் வனப்பகுதியில் அமைந்துள்ள, பில்லூர் அணை கடந்த 25-ம் தேதி நள்ளிரவு நிரம்பியது.
தொடர்ந்து அன்று இரவு 11.30 மணிக்கு, 4 மதகுகளையும் திறந்து, அணைக்கு வரும் தண்ணீர், உபரி நீராக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை தொடர்வதால் 3-வது நாளாக இன்றும் (மே 27) பில்லூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இன்று அதிகாலை 4 மணி நிலவரப்படி, 4-வது மதகு மூடப்பட்டு, மீதமுள்ள 3 மதகுகளின் வழியாக 16,500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
அதிகாலை 5.30 மணி நிலவரப்படி 13,435 கனஅடி, 7 மணி நிலவரப்படி 10,500 கனஅடி, 9 மணி நிலவரப்படி 7,530 கனஅடியும், இன்று மாலை 5 மணி நிலவரப்படி 6,520 கனஅடியும் தண்ணீர் உபரி நீராக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனால், ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல், சிறுவாணி அணையில் 107 மி.மீ, அடிவாரத்தில் 86 மி.மீ அளவுக்கு மழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 3.64 அடி அதிகரித்து 30.24 அடியாக உள்ளது.
அதேபோல், மழை பாதிப்புகளை எதிர்கொள்ள, மாவட்ட பேரிடர் மேலாண்மைத் துறையினரின் கட்டுப்பாட்டு அறைக்கு, மின்தடை தொடர்பாக 15 புகார்களும், மரம் முறிந்து விழுந்தது தொடர்பாக 5 புகார்களும், கழிவுநீருடன் மற்றும் வடிகால் அடைப்பு தொடர்பாக 1 புகார், மழைநீர் தேங்கிக்கிடப்பது தொடர்பாக 1 புகாரும் என வந்தது. இந்த புகார்கள் மாநகராட்சி மற்றும் மின்வாரியத்தின் மூலம் சரி செய்யப்பட்டது.