மதுரை: தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறை கணக்கு மற்றும் ஆட்சிப் பணியாளர் சங்கம் சார்பில் காலியாக உள்ள 450-க்கும் மேற்பட்ட உதவியாளர் பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப வேண்டும் என உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை தல்லாகுளம் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மதுரை மாவட்டத் தலைவர் ரா.சிவக்குமார் தலைமை வகித்தார். இதனை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் க.நீதி ராஜா துவக்கி வைத்தார். இதில் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் நஜிமுதீன், மதுரை மாவட்டப் பொருளாளர் பெ.அசோக் ராஜா ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநிலப் பொருளாளர் என்.ஜெயச்சந்திரன், மாவட்டத் தலைவர் சு.கிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க.சந்திரபோஸ், மாவட்டத் தலைவர் ரா.தமிழ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், பொதுப்பணித் துறை, நீர்வளத்துறைகளில் காலியாக உள்ள 450-க்கும் மேற்பட்ட உதவியாளர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். நீதிமன்ற வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண மண்டல அலுவலகங்களில் சட்ட அலுவலர்கள் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், சங்க மாநிலத் தலைவர் ஆ.செல்வம் நிறைவுரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் ரா.ராஜா ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி கூறினார்.