திருப்பூர்: கோடாங்கிபாளையம் கல் குவாரி கனிம முறைகேடு விவகாரத்தில் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், உரிய அபராதத் தொகையை வசூலிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோடாங்கிபாளையத்தில் செயல்பட்டு வரும் ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான கல் குவாரி, விதிமீறி இயங்குவதாக அப்பகுதியை சேர்ந்த விவசாயி விஜயகுமார் கடந்த 2022-ம் ஆண்டு உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினார். இந்நிலையில் விதிமீறலில் ஈடுபட்டதாக கூறப்பட்ட கல்குவாரி உரிமத்தை, அப்போதைய மாவட்ட ஆட்சியர் சு.வினீத் தற்காலிகமாக ரத்து செய்தார்.
இந்நிலையில், புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் ஜெயகாந்தனிடம் கல்குவாரி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது சிறப்புக்குழு வந்து விசாரணையில் ஈடுபட்டது. அதில் பல்வேறு விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், ரூ.10 கோடியே 40 லட்சம் அபராதம் விதித்து அதனை 2026-ம் ஆண்டு வரை தவணையில் செலுத்திக் கொள்ளலாம் என தெரிவித்திருந்தது. மேலும் கல்குவாரி இயங்குவதற்கான அனுமதியையும் வழங்கியது.
இதையடுத்து, இந்த விவகாரத்தை விவசாயி விஜயகுமார், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சதிஷ்குமார் உள்ளிட்டோர் தமிழக அரசின், இயற்கை வளங்கள் துறையின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அதில் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு, குற்ற வழக்குகள் பதிவு செய்யாமல் இருந்தது மற்றும் தவணையில் அபராதம் செலுத்த கூறியது உள்ளிட்ட விஷயங்களில் தவறு நடந்துள்ளதாக குறிப்பிட்டு காண்பிக்கப்பட்டது.
இந்நிலையில், அரசின் உத்தரவை எதிர்த்து, கல் குவாரி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கல் குவாரி உரிமம் பெற்று நடத்திவந்தாலும், அதில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. கனிமத்துக்கான தொகை, அபராதம் உள்ளிட்டவைகளை கணக்கிட்டால் குறைந்தபட்சம் ரூ. 78 கோடியே 48 லட்சம் முதல் அதிகபட்சம் பல கோடிவரை அபராதம் விதிக்கலாம் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவர்த்தி, “பல்லடம் அருகே சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறிய கல் குவாரிக்கு எதிராக விரைவாக செயல்பட்டு உண்மையை வெளிக்கொணர்ந்ததற்காக முன்னாள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு. வினீத்துக்கு பாராட்டுகள். கனிமங்களை அதிகமாக சுரண்டுவதற்காக அபராதம் விதிக்கப்பட்ட கல் குவாரி உரிமையாளர் ஆர்.ராமகிருஷ்ணனின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, அப்போதைய புவியியல் மற்றும் சுரங்க ஆணையர் ஜெயகாந்தனின் செயல்களையும் கடுமையாகக் கண்டித்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான புகாரில், சரியான அபராதத் தொகையை வசூலிக்குமாறு திருப்பூர் கோட்டாட்சியருக்கு நீதிபதி கடந்த 22-ம்தேதி உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசு தரப்பில் 2 வாரங்களுக்குள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க வேண்டும். தவறிழைத்த அதிகாரிகள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.