சென்னை: தமிழக சட்டப்பேரவையில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை வழங்கவும், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏஐடியூசி) வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஏஐடியூசி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 2003-ம் ஆண்டு முதல் சில்லறை மதுபான வியாபாரத்தை தமிழக அரசே நடத்தி வருகிறது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) மூலம் நடைபெறும் சில்லறை மதுபான விற்பனைப் பிரிவில் சுமார் 24 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். 22 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற காத்திருப்புப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு இயங்கங்களை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த பிப்.11-ம் தேதி சங்கப் பிரதிநிதிகளிடம் பேசிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர், போராட்டங்கள் தேவையில்லை, பேசி தீர்வு காணலாம் எனக் கூறினார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தமிழக சட்டப் பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசும் போது, ஏப்ரல் 2025 முதல் டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாதம் ரூ 2000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவித்தார்.
சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வுக்கு அரசாணை வெளியிட வேண்டிய தமிழக அரசு, பேரவையில் அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை வெட்டிக் குறைக்கும் முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இது அமைச்சரின் அறிவிப்பை அர்த்தமற்றதாக செய்வதுடன், அரசு மீதான நம்பிக்கையை தகர்க்கும் செயலாகும்.
சொல்லொணா வேதனையிலும், நெருக்கடியிலும், அவப்பெயரை தாங்கியபடி, அரசின் வருமானத்தை ஈட்டி தருவதில், அக்கறையுடன் பணிபுரிந்து வரும் டாஸ்மாக் பணியாளர்களின் ஊதிய உயர்வை தடுக்கும் அதிகார வர்க்கத்தின் அத்துமீறலை முதல்வர் தலையிட்டு தடுத்து, அமைச்சரால், பேரவையில் அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை வழங்கவும், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.