புதுச்சேரி: முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் அறிவித்தார்.
நாடு முழுவதும் மீண்டும் கரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளது. என்.பி.1.8.1 என்ற கரோனா தொற்று பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழகத்தில் கரோனா தொற்று பரவி வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 84 வயதான முதியவர் பலியாகியுள்ளார்.
இந்த நிலையில், புதுவையிலும் கரோனா தொற்று சில நாட்களாக பரவி வருகிறது. புதுவையில் 12 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் 12 பேரும் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் புதுவைக்கு வந்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ், முக கவசம் அணிவது கட்டாயமில்லை என தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: கரோனா நோய் தடுப்பிற்கான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசு செய்துள்ளது. தற்போதைக்கு முக கவசம் கட்டாயமில்லை. கரோனா தொற்று பரவலை பொறுத்து அந்தந்த மாநில அரசுகள், அவர்கள் மாநிலத்துக்கு ஏற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
முன்னதாக கடற்கரை சாலையில் யோகா விழாவில் மத்திய சுகாதார இணை அமைச்சர் பிரதாப ராவ் ஜாதவ் பேசியதாவது: இந்திய கலாச்சாரத் தன்மையை பாதுகாக்கும் கடற்கரை நகரமாக புதுச்சேரி உள்ளது. சர்வதேச யோகா தினம் கவுண்டவுன் தொடங்கியுள்ள நிலையில் நாம் இங்கு கூடியுள்ளோம். நல்வாழ்வுக்கு யோகா சிறந்தது என்பதை பிரதமர் மோடியின் முயற்சியால் உலக மக்கள் யோகாவை உணர்ந்து ஏற்றுள்ளனர். இது உடற்பயிற்சி மட்டுமல்ல, இது உடல் மனம் ஆன்மாவை ஒன்றிணைக்கிறது.
யோகா செய்தால் அமைதி, தூய்மை, சக்தி, பலம் ஆகியவை கிடைக்கும். மன அழுத்தத்துக்கான சரியான தீர்வாக யோகா அமைந்துள்ளது. ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும், மன அழுத்தம் இல்லாமலும் வாழ யோகா உதவுகிறது. யோகா விலை மதிப்பில்லா பரிசு. மருந்து இல்லாமல் இயற்கை வழியில் மகிழ்ச்சியாக வாழ உதவும் என்றார்.