தமிழகம்

சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் டிஜிட்டல் முறையில் கருத்து கேட்கும் வசதி அறிமுகம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், முழு உடல் பரிசோதனை மையத்தின் சேவையை மேம்படுத்த டிஜிட்டல் முறையில் கருத்து கேட்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.10 கோடியில் முழு உடல் பரிசோதனை மையம் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கோல்டு (ரூ.1,000), டைமண்ட் (ரூ.2,000), பிளாட்டினம் (ரூ.3,000), பிளாட்டினம் பிளஸ் (ரூ.4,000) என 4 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முழு ரத்த பரிசோதனை, சிறுநீரகம், ரத்த கொழுப்பு, கல்லீரல், இசிஜி, அல்ட்ரா சவுண்ட், தைராய்டு, ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம், எலும்பு திண்மம், கண் பரிசோதனை, நுரையீல் செயல்பாடு மற்றும் இதய செயல்பாட்டை கண்டறியும் டிரெட்மில் பரிசோதனைகள் என 100-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் அதன்கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை 75 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், தமிழகத்திலேயே முதன்முறையாக, கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை அறியும் பரிசோதனை திட்டங்களும் செய்யப்பட்டு வருகின்றன. சிசுவுக்கு மரபணு ரீதியான பாதிப்பு உள்ளதா என்பதை அறியும் டபுள் மார்க்கர் சோதனையும், மூக்கு எலும்பு, கழுத்து பகுதி, ரத்த ஓட்டம் உள்ளிட்டவற்றை அறியும் வளர்ச்சி பரிசோதனை அதன்மூலமாக செய்யப்படுகிறது. இந்த பரிசோதனைத் திட்டங்களுக்கு தற்போது நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் அதன் தரத்தை அறியும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் ஆர்.மணி, ஒருங்கிணைப்பு அதிகாரி மருத்துவர் ஆனந்தகுமார் ஆகியோர் கூறியதாவது:

இந்த மருத்துவமனையின் முழு உடல் பரிசோதனை மையத்தில் தனியார் மருத்துவமனைகளில் கூட இல்லாத சில உயர் மருத்துவ உபகரணங்கள் உள்ளன. இந்நிலையில், தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து கருத்து அறியும் மென்பொருள் வடிவமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

செல்போனுக்கு குறுந்தகவல்: பரிசோதனைக்கு வருவோரின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் இணைய இணைப்புக்கு சென்று முழு உடல் பரிசோதனைக்கான முன்பதிவு, பணம் செலுத்தும் வசதி, வரவேற்பு, உள்கட்டமைப்பு, கவனிப்பு, உணவு தரம், பரிசோதனை வசதிகள், மருத்துவ ஆலோசனை, பணியாளர்கள் சேவை உள்ளிட்டவற்றை ஒன்று முதல் ஐந்து என நட்சத்திர தரவரிசைப்படுத்தலாம். கருத்துகளை எழுத்துப்பூர்வமாகவோ, ஒலி வடிவிலோ பதிவிடலாம். அதன் அடிப்படையில் குறைகள் களையப்பட்டு சேவை மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT