சென்னை: சுகாதாரமற்ற உணவை விநியோகம் செய்த சொமோட்டோ நிறுவனமும், சம்பந்தப்பட்ட உணவகமும் இணைந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ரூ.30 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க வேண்டுமென சென்னை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெகபிரபு நாராயணசாமி என்பவர் வேளச்சேரியில் உள்ள அர்ஜுன் மம்மிடாடி என்ற ஆந்திரா மெஸ் உணவகத்தில் சொமோட்டோ மூலமாக கடந்தாண்டு ஜூலை 5-ம் தேதியன்று அசைவ உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அதை சாப்பிட்ட ஜெகபிரபுவுக்கு சிறிது நேரத்தில் மூச்சுத் திணறலுடன், தலைச் சுற்றல், நெஞ்சுவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனையில் 2 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை சீரானது.
இது தொடர்பாக அவர் உணவுத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அந்த உணவகத்தில் சோதனை நடத்திய அதிகாரிகள் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த அந்த உணவகத்துக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
சுகாதாரமற்ற உணவைத் தயாரித்த உணவகம் மற்றும் விநியோகம் செய்த சொமோட்டோ நிறுவனம் ஆகியவை தனக்கு இழப்பீடாக ரூ.2.50 லட்சத்தை வழங்க உத்தரவிடக் கோரி, ஜெகபிரபு சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் டி.கோபிநாத் மற்றும் உறுப்பினர்களான கவிதா கண்ணன், வி.ராமமூர்த்தி ஆகியோர் சம்பந்தப்பட்ட உணவகமும், சொமோட்டோ நிறுவனமும் இணைந்து பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரம் மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.30 ஆயிரத்தை வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.