கோவை செளரிபாளையம் சாலையில், வடியாமல் சேறும் சகதியுடன் தேங்கிக் காணப்படும் மழைநீர்: படம்: ஜெ.மனோகரன் 
தமிழகம்

“கோவையில் மழை நின்ற பின் சாலைகள் சீரமைப்பு பணி” - அமைச்சர் முத்துசாமி தகவல்

இல.ராஜகோபால்

கோவை: கோவை மாவட்டத்தில் மழை நின்ற பின் சாலைகள் சீரமைப்பு பணிகள் தொடங்கும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து பல்வேறு பகுதிகளில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். மாலை 3 மணிக்கு பேரூர் செல்வசிந்தாமணி குளம், ஆண்டிபாளையத்தில் உள்ள கோவை அணைக்கட்டு, புட்டுவிக்கி சாலை, மதுக்கரை பிச்சனூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை நேரில் பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் முத்துசாமி கூறியது: “கோவை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் என்னையும், செந்தில் பாலாஜியையும் நேரில் சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார். கோவை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எட்டு வீடுகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளன. இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த முறை பெய்த மழையை கணக்கில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மேலும் சில திட்டங்கள் செயல்படுத்தப்பட முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. வாழை தோட்டம் சேதமடைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது வரை ஒரு மீட்பு முகாமில் மட்டுமே சிலர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வால்பாறை, மேட்டுப்பாளையத்தில் அதிக மழை பெய்துள்ளது. இருப்பினும் பாதிப்பு அதிகம் இல்லை. கோவை மாவட்டத்தில் மழை நின்ற பின் சாலைகள் சீரமைப்பு பணிகள் தொடங்கும்” என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT