தமிழகம்

கடலூரில் விளையாட்டுத் திடலை பலாப்பழ மதிப்புக்கூட்டு மையமாக மாற்ற ஐகோர்ட் இடைக்கால தடை

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கடலூரில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான விளையாட்டு திடலை, பலாப்பழ மதிப்பு கூட்டு மையமாக மாற்றுவதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த ஜி.ராஜலிங்கம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “கடலுார் மாவட்டம், சி.என்.பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பட்டீஸ்வரம் கிராமத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் ‘மலை திடல்’ என அழைக்கப்படும் பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது. 200 ஆண்டுகள் பழமையான இந்த விளையாட்டு மைதானத்தை, பள்ளி மாணவ, மாணவிகள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மக்களிடம் எவ்வித கருத்து கேட்புக் கூட்டமும் நடத்தாமல், கடலூர் மாவட்ட ஆட்சியர், பலாப்பழ மதிப்பு கூட்டு மையம் கட்டுவதற்கான அனுமதி வழங்கி, கடந்த ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பள்ளி மாணவர்களின் உடல் நலம் சார்ந்த நடவடிக்கைக்கு பயன்பட்டு வந்த விளையாட்டு மைதானத்தை, பலாப்பழ மதிப்பீட்டு கூட்டு மையமாக மாற்றும் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை சட்டவிரோதமானது. பொது நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை, மறு வகைப்படுத்தும் அதிகாரம் இல்லை என, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தெளிவுப்படுத்தி உள்ளது. எனவே, விளையாட்டு மைதானம் உள்ள நிலத்தில், பலாப்பழ மதிப்பு கூட்டும் மையம் கட்டும் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்,” என்று மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “பொது நலனுக்காக தான் இந்த மையம் கட்டுவதாக இருந்தால், மனுதாரருக்கு என சொந்தமாக உள்ள நிலத்தை, இலவசமாக வழங்க தயாராக உள்ளார். அரசுக்கு வழங்கும் நிலத்துக்கு எவ்வித இழப்பீடும் கோர மாட்டார். கடந்த 200 ஆண்டுகளாக விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்த பகுதியில் எவ்வித கட்டுமானமும் கட்ட அனுமதிக்கக்கூடாது. கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்,” என வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடலூரில் பலாப்பழ மதிப்புக்கூட்டு மையம் அமைக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த மனுவுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வேளாண் உதவி இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

SCROLL FOR NEXT