ஊட்டி: கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 353 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மழை தொடர்வதால் சுற்றுலா தலங்கள் இன்றும் மூடப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்றும் (திங்கட்கிழமை) நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா காட்சி முனை, பைன்பாரஸ்ட், அவலாஞ்சி, பைக்காரா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் முன்கூட்டியே மூடப்பட்டன. இதனால் ஏற்கெனவே அறை முன்பதிவு செய்து வந்திருந்த சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் தங்கும் விடுதிகளில் இருந்தனர்.
அதி கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள், ஊட்டி படகு இல்லம் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 353 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மழைக்கு ஊட்டி, குன்னுார், கூடலுார், பந்தலூர் பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு மீட்பு குழு, நெடுஞ்சாலைத் துறையினர் உடனுக்குடன் அகற்றி வருகின்றனர். மரங்கள் மின்கம்பிகள் மீது விழுவதால் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதன் காரணமாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலை துறைக்கு சொந்தமான, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, டீ பார்க், மரவியல் பூங்காக்கள் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி இன்றும் மூடப்பட்டுள்ளன. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சூழல் சுற்றுலா மையங்களும் மூடப்பட்டுள்ளன. ஓயாமல் கன மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது. சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில்: அப்பர் பவானி 298, எமரால்டு 182, கூடலூர் 153, சேரங்கோடு 139, பந்தலூர் 137, குந்தா 115, பாடந்தொரை 105, கிளன்மார்கன் 105, செருமுள்ளி 101, ஓவேலி 89, நடுவட்டம் 80, கிண்ணக்கொரை 72, ஊட்டி 71.1, தேவாலா 63, கெத்தை 45, மசினகுடி 36, பர்லியாறு 35, கோடநாடு 32, குன்னூர் 30, கல்லட்டி 20, கோத்தகிரி 16, கீழ் கோத்தகிரி 8.