சேலம்: சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. போலீஸார் நடத்திய சோதனையில் அது புரளி என்பது தெரியவந்தது. அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி, கோவையில் இருந்து நேற்று மாலை 7 மணி அளவில் சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு வந்தார்.
இந்நிலையில் அவரது வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக சென்னையில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு தகவல் வந்தது. இதையடுத்து சேலம் மாநகர காவல் துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வெடிகுண்டு தடுப்புப் பிரிவு ஆய்வாளர் மற்றும் சூரமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோர் தலைமையிலான போலீஸார் பழனிசாமி வீட்டில் சோதனை நடத்தினர். வீடு, கார் ஷெட் என்ன பல்வேறு இடங்களிலும் போலீஸார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை.