கூடலூர்: ஓவேலி காட்டாற்றின் நடுவே வெள்ளத்தில் கார் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 3 பேர் உயிர் தப்பினர். நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை மிக அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆற்றை கடக்க முயன்றபோது கார் அடித்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 நாட்கள் முன்னதாகவே தொடங்கிய தென்மேற்கு பருவமழையால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை மிக அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை எச்சரிக்கை இடையே, நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஆற்றை கடக்க முயன்றபோது கார் அடித்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓவேலி பகுதிக்கு சென்றவர்கள் தர்மகிரி பாலத்தை கடந்தபோது வெள்ளத்தில் சிக்கினர். இந்த காரில் இருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கூடலூர் ஓவேலி வனச்சரகத்தில் யானை விரட்டும் காவலராக பணியாற்றி வருகிறார் ராஜேஷ். இவர் விடுமுறை பெற்று கேரளா மஞ்சேரியை சேர்ந்த நண்பர்கள் ஆண்டோ தாமஸ் (53), அருண் தாமஸ் (44), ஆகியோருடன், ஓவேலி அண்ணா நகர் - தருமகிரி சாலை வழியாக கூடலூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
செல்லும் வழியில் ஆற்றைக் கடக்க முயன்ற போது, கார் வெள்ளத்தில் சிக்கியது. மூவரும் தப்பிக்க வழியின்றி, காரின் மீது ஏறி நின்று சத்தமிட்டனர். கூடலூர் நிலைய தீயணைப்பு வீரர்கள், நள்ளிரவு 1:00 மணிக்கு, அப்பகுதிக்கு சென்று, போராடி அதிகாலை 3:30 மணிக்கு மூவரையும் உயிருடன் மீட்டனர்.
கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையளவு - மில்லி மீட்டரில்: அவலாஞ்சி - 215, எமரால்டு - 94, பந்தலூர் - 93, சேரங்கோடு - 90, தேவாலா - 87, அப்பர் பவானி, கூடலூர் -74 செருமுள்ளி, ஓவேலி, பாடந்தொரை - 60.