அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட மணிகள். 
தமிழகம்

வெம்பக்கோட்டையில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு

இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வந்த மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்துள்ளன. 5,003 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள வைப்பாற்றங்கரையோரத்தில் ஏராளமான பழங்காலப் பொருட்கள் கிடைத்தன. அதையடுத்து, இப்பகுதியில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்ற தமிழக அரசு வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் அமைந்த வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் 2022-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி முதல் கட்ட அகழாய்வு பணிகளை தொடங்கியது. 2022 செப்டம்பர் வரை இப்பணிகள் நடைபெற்றன. நுண்கற்காலக் கருவிகள், பல வகையான பாசிமணிகள், சுடு மண்ணாலான காதணிகள், பொம்மைகள், தக்களி, சங்க கால வளையல்கள், மோதிரங்கள், சில்லு வட்டுகள், இரும்பு உருக்கு கழிவுகள், சங்கு வளையல்கள் என 3,254 பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து, இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் 2023-ம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கின. பழங்கால பானை ஓடுகள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டன. அதோடு, சங்கு வளையல்கள், சுடுமண் காதணிகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொருட்கள் என 4,660 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் 2024 ஜூன் 18-ம் தேதி தொடங்கின. 22 குழிகள் தோண்டப்பட்டு 5,003 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த அகழாய்வு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

அகழாய்வின் மூலம் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை மதிப்பீடு செய்து கணினியில் பதிவுசெய்து ஆவணப்படுத்தும் பணிகள் அடுத்த 4 மாதங்களுக்கு மேற்கொள்ளப்படும் என தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு கட்ட அகழாய்வுக்கும் தமிழக அரசு ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு அளித்தது. கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் நான்காம் கட்ட அகழாய்வுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT