கோப்புப்படம் 
தமிழகம்

மேற்கூரை சூரியசக்தி மின்நிலையங்களுக்கு நெட்வொர்க் சார்ஜ் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வலியுறுத்தல்

ப.முரளிதரன்

சென்னை: “மேற்கூரை சூரியசக்தி மின்நிலையங்களுக்கு நெட்வொர்க் சார்ஜ் கட்டணம் வசூலிப்பதை மின்வாரியம் ரத்து செய்ய வேண்டும்.” என தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து நூற்பாலை சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் வீடுகள், தொழிற்சாலைகளில் மேற்கூரை சூரியசக்தி மின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை அமைத்திருக்கும் உயரழுத்த பிரிவினரிடம் இருந்து நெட்வொர்க் சார்ஜ் என ஒரு யூனிட்டுக்கு ரூ.1.04ம், தாழ்வழுத்த பிரிவினருக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.1.59ம் மின்வாரியம் வசூலிக்கிறது. இந்தக் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி பல்வேறு தொழில் நிறுவனங்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம் வெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்து கடந்த 2024 டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து, வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டும் அந்தக் கட்டணத்தை மின்வாரியம் வசூலிப்பதை நிறுத்தியது. இந்நிலையில், கட்டணம் ரத்துக்கு காரணமான ஒரு நிறுவனத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மின்வாரியம், கடந்த மாதம் தடை உத்தரவு பெற்றது.

இந்த உத்தரவை பின்பற்றி தற்போது அனைத்து நிறுவனங்களுக்கும் மீண்டும் நெட்வொர்க் சார்ஜ் வசூலிக்கப்படுகிறது. இதையடுத்து, தடை உத்தரவு பெற்ற நிறுவனத்துக்கு மட்டும் நெட்வொர்க் கட்டணத்தை வசூலிக்குமாறும், மற்ற நிறுவனங்களுக்கு வசூலிக்கக் கூடாது என்றும் மின்வாரிய தலைவரிடம் எங்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கை மீது மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT