சென்னை: சென்னை, புழல் மத்திய சிறையில் விசாரணை கைதி ஒருவர், பிளேடால் கழுத்து, வயிற்றில் கிழித்துக் கொண்டும், பிளேடை விழுங்கியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் பிரிவுகளில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், ஒருவர் சென்னை- மாத்தூரை சேர்ந்த செபாஸ்டின் டேனியல் (23). இவர், குட்கா வழக்கு தொடர்பாக சமீபத்தில் எழும்பூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரணை பிரிவில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் செபாஸ்டின் டேனியல் நேற்று முன் தினம் சிறை வளாகத்தில் மறைத்து வைத்திருந்த பிளேடால் தமது கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதிகளில் கிழித்துக் கொண்டும், பிளேடை விழுங்கியும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதுகுறித்து, சக கைதிகள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடம் விரைந்த சிறை காவலர்கள் செபாஸ்டின் டேனியலை மீட்டு சிறை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற செபாஸ்டின் டேனியல் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, புழல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செபாஸ்டின் டேனியல், இளம் பெண் ஒருவரை காதலித்து வந்ததால், அப்பெண்ணின் தந்தை, செபாஸ்டின் டேனியல் வீட்டுக்குச் சென்று, அவரது பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து, செபாஸ்டின் டேனியலின் தாய், சிறையில் உள்ள மகனை சந்திக்க வரும்போது தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான செபாஸ்டின் டேனியல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.