திருவள்ளூர்: பூண்டி ஏரி நீரால், முழு கொள்ளளவை எட்டும் நிலையில் புழல் ஏரி உள்ளது. இதைத் தொடர்ந்து பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில், மழைக்காலங்களில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் மழைநீரும், சென்னை குடிநீருக்காக தெலுங்கு- கங்கை திட்டத்தின் கீழ், ஆந்திர மாநிலம்-கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்படும் கிருஷ்ணா நதி நீரும் சேமித்து வைக்கப்படுவது வழக்கம்.
சென்னையின் குடிநீர் தேவைக்கேற்ப, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கு இணைப்புக்கால்வாய் மூலம் இந்த நீரை திறந்து விடுவது வழக்கம். அந்த வகையில், கடந்த மார்ச் 29-ம் தேதி முதல், பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் மூலம் விநாடிக்கு 350 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு வந்தது.
இதனாலும், அவ்வப்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையாலும் புழல் ஏரியின் நீர் இருப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு மற்றும் 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில், கடந்த 21-ம் தேதி காலை 3,060 மில்லியன் கன அடி நீர் இருப்பும், 20.24 அடி நீர் மட்டமும் இருந்தது.
இந்த அளவு, முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்ததால், கடந்த 21-ம் தேதி மாலை, பூண்டி ஏரியிலிருந்து, புழல் ஏரிக்கு நீர் திறப்பை நீர் வள ஆதாரத் துறையினர் நிறுத்தினர். இதனால், நேற்று காலை நிலவரப்படி, புழல் ஏரியில் 3,044 மில்லியன் கன அடி நீர் இருப்பும், 20.16 அடி நீர் மட்டமும் உள்ளது. விநாடிக்கு 184 கன அடி நீர் சென்னை குடிநீர் தேவைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும், புழல் ஏரியில் படிபடியாக நீர் இருப்பு குறையும்போது, சென்னையின் குடிநீர் தேவையை பொறுத்து, பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு நீர் திறக்கப்படும் என நீர் வள ஆதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.