வேலூர் திமுக-வில், கதிர் ஆனந்த் எம்பி, வேலூர் மத்திய மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏ-வுமான ஏ.பி.நந்தகுமார், வேலூர் மாநகரச் செயலாளரும் எம்எல்ஏ-வுமான கார்த்திகேயன் என ஆளுக்கொரு பக்கமாக முக்கோண அரசியல் நடத்துபவர்கள். இவர்கள் மூவரும் தங்களது ஆதரவாளர்களை சந்தோசப்படுத்த தங்கள் செலவில் அவர்களை இன்பச்சுற்றுலா இட்டுச் செல்வது தான் இப்போது வேலூர் திமுக-வில் குளுகுளு பேச்சாக இருக்கிறது.
இந்த ஆண்டு மட்டுமல்ல... கடந்த சில ஆண்டுகளாகவே இந்த மூவரும் மாவட்ட திமுக-வினரை கோடை தவறாமல் குளுகுளு சுற்றுலா அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். கழகத்தினருக்கு இந்த பேக்கேஜ் சிஸ்டத்தை முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்தவர் மத்திய மாவட்டச் செயலாளர் நந்தகுமார் தான். அவரைப் பார்த்து மற்றவர்களும் தங்களது விசுவாசிகளை குஷிப்படுத்த இதை அமல்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிந்த கையோடு, தேர்தலில் பம்பரமாய் சுழன்று பணியாற்றிய உடன்பிறப்புகளை லிஸ்ட் எடுத்த நந்தகுமார், அவர்களை இரண்டு பஸ்களில் நிரப்பி ஊட்டிக்கு அழைத்துச் சென்று மகிழ்வித்தார். அப்போது நந்தகுமார் ஊட்டியில் ஆடிய பாரம்பரிய கலாசார நடனமும் சினிமா பாட்டுக்கு அவர் போட்ட குத்தாட்டமும் சமூகவலைதளங்களில் செம வைரலானது. அப்போது அவர் போட்ட ‘ஆட்டங்களுக்கு’ தலைமையிலிருந்து எப்படி ‘பாராட்டு’ வந்ததோ தெரியவில்லை. இந்த முறை அவர் சகாக்களுடன் இன்பச் சுற்றுலாவில் உடன் செல்லவில்லை.
இம்முறை நந்தகுமார் ‘ஸ்பான்சரில்’ வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மு.பாபு தலைமையில் கவுன்சிலர்கள் 13 பேர் உட்பட ஒரு பெரும் பட்டாளமே 5 நாள் பயணமாக குலு மணாலிக்குச் சென்று திரும்பி இருக்கிறது. இதேபோல், மாவட்டத்துக்கு நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் வேலூர் மாநகரச் செயலாளர் கார்த்திகேயனும் தனது விசுவாசிகளுக்கு ஊட்டி ட்ரிப் ஆஃபரை அள்ளிக் கொடுத்திருக்கிறார்.
கார்த்திகேயனின் ஆதரவாளரான வேலூர் மேயர் சுஜாதா தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் சிலர் ஊட்டிக்குச் சென்று கோடையின் குளுமையை அனுபவித்துவிட்டு திரும்பி இருக்கிறார்கள். இந்தப் பயணத்தில் ஒப்பந்ததாரர்கள் சிலரும் இருந்ததாகச் சொல்கிறார்கள்.
மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கவே(?) இந்தப் பயணம் என வெளியில் சொல்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து அடுத்ததாக கதிர் ஆனந்த் எம்பி-யின் ஆதரவாளர்களும் கோடைச் சுற்றுலா செல்ல ஆயத்தமாகி வருவதாகச் சொல்கிறார்கள். தலைமையின் சிக்னல் கிடைத்ததும் அவர்கள் ஏற்காடு செல்வதாக ஒரு செய்தி காற்றில் கசிகிறது.
திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டங்களை நடத்த கழகத்தினருக்கு உத்தரவிட்டுள்ளது திமுக தலைமை. அந்தக் கூட்டங்களுக்கு நடுவே வேலூர் உடன்பிறப்புகள் புத்துணர்ச்சிப் பயணங்களை திட்டமிட்டு வருகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய வேலூர் திமுக நிர்வாகிகள் சிலர், “இதை இன்பச்சுற்றுலான்னு எல்லாம் சொல்ல முடியாது. வருசா வருசம் கோடை சீசன்ல ஏதாவது ஒரு சுற்றுலாதலத்துக்கு குடும்பத்தோட போயிட்டு வருவோம். அப்படித்தான் இந்த வருசமும் போய்ட்டு வந்தோம். மாமன்ற உறுப்பினர்கள் அலுவல் ரீதியாக போயிட்டு வந்தாங்க. மத்தபடி ஸ்பெஷலா சொல்றதுக்கு எதுவும் இல்லைங்க” என்றனர்.
ஆதரவாளர்களை தங்கள் பக்கமே தக்க வைக்கவும், அவர்கள் எந்தச் சூழலிலும் தங்களின் கைமீறிப் போகாமல் இருக்கவுமே ஆண்டு தோறும் வேலூர் திமுக முக்கிய நிர்வாகிகள் இந்த டூர் பிளானை செயல்படுத்தி வருவதாக பொறாமையுடன் சொல்கிறார்கள் குளுகுளு பயணத்தில் பங்கெடுக்காத உடன்பிறப்புகள்!