புதுச்சேரியில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாரை எதிர்க்கட்சிகள் விடாது துரத்திக் கொண்டிருக்கின்றன. அவர் சம்பந்தப்பட்ட இடங்களில் சந்தனக் கட்டைகளும், போலி மது பாட்டில்களும் சிக்கியதே துரத்தலுக்கான துருப்புச் சீட்டு!
உளவாய்க்காலில் அமைச்சர் தரப்புக்குச் சொந்தமான தேனீ பண்ணை என்ற இடம் உள்ளது. இங்கு செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தில் கடந்த ஆண்டு 6 டன் சந்தனக் கட்டைகளை சேலம் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இவை சந்தன எண்ணெய் எடுப்பதற்காக கடத்திவரப்பட்டதாக அப்போது சொல்லப்பட்டது. அதேசமயம், “இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது இடத்தை வாடகைக்கு எடுத்திருந்தவர்கள் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார்கள்” என அப்போது தேனீ ஜெயக்குமார் தன்னிலை விளக்கம் கொடுத்தார். இருந்தபோதும் அப்போது இந்த விவகாரத்தை அமைச்சருக்கு எதிராக ஊதிப் பெரிதாக்கி ஓய்ந்தன எதிர்க்கட்சிகள்.
இந்நிலையில், அண்மையில் புதுச்சேரி எல்லையில் உள்ள தமிழகத்தின் விழுப்புரம் பூத்துறையில் தமிழக நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் நடத்திய வாகன சோதனையில் லாரியில் கடத்தி வரப்பட்ட போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுச்சேரி சாராயத்தைக் கொண்டு போலியாக இந்த மது பாட்டில்கள் தயாரிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
இதன் ரிஷிமூலத்தை போலீஸார் துருவிய போது, இந்த ‘கலக்கல்’ நடந்த இடம் ஏற்கெனவே சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட தேனீ ஜெயக்குமாருக்கு சொந்தமான அதே இடம் தான் எனத் தெரியவந்தது. அங்கு நடத்தப்பட்ட தொடர் சோதனையில், டாஸ்மாக் ஸ்டிக்கர்கள், காலி பாட்டிகள் உள்ளிட்டவை சிக்கின. இதையடுத்து இந்த விவகாரத்தை சிபிஐ வந்து விசாரிக்க வேண்டும் என்ற ரேஞ்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீண்டும் ஜெயக்குமாருக்கு எதிராக குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துவிட்டன.
இதுபற்றி பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரி கலால்துறை குறட்டைவிட்டுத் தூங்குகிறது. போலி மதுபானம் புதுச்சேரியில் தயாரிக்கப்பட்டு தமிழகத்துக்கு கொண்டுசெல்லும்போது தமிழக போலீஸார் பிடித்துள்ளனர். போலி மது தயாரிக்கப்பட்ட இடம் அமைச்சர் குடும்பத்துக்குச் சொந்தமானது. ஏற்கெனவே சந்தனக்கட்டை பிடிபட்ட வழக்கும் தற்போது போலி மதுபான வழக்கும் உள்ளதால் பாரபட்சமில்லாத விசாரணை நடக்க அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும். கலால் துறையை வைத்துள்ள முதல்வர் ரங்கசாமியும் இதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார்.
இந்த விஷயத்தில் பிரதான எதிர்க்கட்சியான திமுக வாய்மூடி மவுமனாக இருப்பது ஏன் எனவும் சிலர் கேள்வி எழுப்பினார்கள். இது தொடர்பாக நம்மிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, “ஏற்கெனவே சந்தனக் கட்டை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. தற்போது அதே இடத்தில் போலி மதுபானங்கள் தயாரித்து பெரிய தவறு நடந்துள்ளது.
புதுச்சேரி கலால் துறையும், போலீஸாரும் இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என தெரிவிக்க வேண்டும். அமைச்சர் தேனீ ஜெயக்குமாரும் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் முதல்வர் ரங்கசாமியும் இதற்கு பதில் சொல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் அமைச்சர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.
அமைச்சர் தேனீ ஜெயக்குமாரோ, “எனது மகளுக்குச் சொந்தமான அந்த இடத்தில் 8 நிறுவனங்கள் செயல்படுகிறது. அங்குள்ள ஒரு குடோனை அதே ஊரைச் சேர்ந்தவர்கள் ஒரு மாதத்துக்கு முன்பு தான் வாடகைக்கு எடுத்தனர். அட்வான்ஸ் கூட முழுமையாக தரவில்லை. அவர்கள் தான் அங்கே போலி மது தயாரித்ததாக தமிழக போலீஸாரிடம் சொல்லி இருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் 9 பேரைக் கைது செய்திருக்கிறது போலீஸ். உள்ளூர்காரர்கள் என நம்பித்தான் வாடகைக்கு இடத்தைக் கொடுத்தோம். அவர்கள் தப்பு செய்திருக்கிறார்கள் என்றதும் நாங்கள் தான் அவர்களை போலீஸில் பிடித்துக் கொடுத்தோம். ஆனால், இதற்கு முன்பு சந்தனக்கட்டை விவகாரத்தில் எங்களை இழுத்துப் பேசியது போல் இந்த விவகாரத்திலும் எங்களை தேவையில்லாமல் சம்பந்தப்படுத்தி அரசியலாக்குகிறார்கள்.
நாங்கள் குடோனை மட்டும் தான் வாடகைக்குக் கொடுத்தோம். அதை வாடகைக்கு எடுத்துவர்கள் செய்த தவறுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இருந்தபோதும் எனது பெயருக்கு களங்கம் உண்டாக்க வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்கிறார்கள். இப்போது மட்டுமல்ல... 1997-ல் நான் அமைச்சராக இருந்த போதும் நான் விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என்றும் புலிகளை இங்கு தங்க வைத்ததாகவும் சக அமைச்சர் ஒருவரே என் மீது புகார் தந்தார்.
அதேபோல் எங்கள் வீட்டில் ஹாம்கார்டு ஒருவரை கொலை செய்து விட்டதாக முன்னாள் அமைச்சர் ஒருவர் புகார் தந்தார். அது தொடர்பாக நானே உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு அதில் எனக்கு சம்பந்தமில்லை என்று நிருபித்தேன். இப்போது, எஃப்ஐஆரில் எனது பெயரோ, எனது குடும்பத்தினர் பெயரோ இல்லாத நிலையிலும் எங்களை வம்புக்கு இழுக்கிறார்கள். அதனால் இப்போதும் என மகள் தரப்பில் இந்த விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவிருக்கிறார்கள்” என்றார்.