கோப்புப் படம் 
தமிழகம்

வடபழனியில் 2 மெட்ரோ நிலைய வழித்தடங்களை இணைக்க ரூ.10 கோடியில் உயர்நிலை மேம்பாலம் அமைக்க முடிவு

செய்திப்பிரிவு

சென்னை: வடபழனியில் இரண்டு மெட்ரோ ரயில் நிலைய வழித்தடங்களை இணைக்கும் விதமாக, ரூ.10 கோடியில் உயர்நிலை மேம்பாலம் அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை 4-வது வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை பணி, உயர்மட்டப்பாதை பணி நடைபெறுகிறது.

அதிலும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்டப்பாதையாக அமைகிறது. இதில், ஒருபகுதியாக, போரூர் - பூந்தமல்லி வரை உயர்மட்டப்பாதையில் ஒருவழிப்பாதை தயாராகிவிட்டது. மற்றொரு வழிப்பாதை இந்தமாத இறுதிக்குள் தயாராகிவிடும்.

இதனிடையே, போரூர் - கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் வரை வழித்தடத்தில் தண்டவாளம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்தவழித்தடத்தில் வடபழனியில் புதியதாக ஒரு ரயில் நிலையம் அமைக்கப்படுகிறது. ஏற்கெனவே, பரங்கிமலை - சென்ட்ரல் வரையிலான பச்சை வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள், வடபழனி வழியாக செல்கிறது.

இந்த ரயில் நிலையத்துடன் தற்போது 2-வது கட்ட திட்டப்பணியில் கட்டப்படும் மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில், புதிதாக உயர்நிலை மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. பூந்தமல்லியில் இருந்து சென்ட்ரலுக்கு செல்லும் பயணிகள் மாறிச் செல்ல இந்த மேம்பாலம் வசதியாக இருக்கும்.

130 மீட்டர் நீளமும் 6 மீட்டர் அகலும் கொண்டதாக அமைக்கப்படவுள்ள இந்த மேம்பாலம் ரூ.10 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. அடுத்த 6 மாதங்களில் மேம்பாலம் கட்டுமானப்பணிகள் தொடங்கி நடைபெறும் என்று மெட்ரோரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT