தமிழகம்

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

செய்திப்பிரிவு

பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் இன்று காலை டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

மத்திய திட்ட குழுவுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் 9-வது நிர்வாக குழு கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை (மே 24) நடைபெற உள்ளது. இதில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் பங்கேற்கின்றனர். முந்தைய ஆண்டுகளில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்காத நிலையில், நாளை நடைபெறும் கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று முன்தினம் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘தமிழகத்துக்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ம் தேதி டெல்லி செல்கிறேன். கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன். தமிழகத்துக்கான நிதியை போராடி பெறுவேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9.30 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். டெல்லியில் பகல் 12.50 மணிக்கு முதல்வரை திமுக எம்.பி.க்கள் வரவேற்கின்றனர். இதை தொடர்ந்து, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுக்கிறார்.

பின்னர், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது. தமிழகத்துக்கான நிதி தொடர்பாக சில மத்திய அமைச்சர்களை அவர் சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நாளை காலை 9 மணிக்கு டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், தமிழகத்துக்கு ஒருங்கிணைந்த கல்வி (சமக்ர சிக்‌ஷா), பேரிடர் நிவாரண நிதி உள்ளிட்ட நிலுவை நிதிகளை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். நாளை இரவு சென்னை திரும்புகிறார்.

SCROLL FOR NEXT