சென்னை: பரனூர் சுங்கச்சாவடியில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட லாரியை 10 கி.மீட்டர் தூரம் வரை விரட்டிப் பிடித்த போக்குவரத்து போலீஸாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்து சான்று வழங்கினார்.
தாம்பரம் காவல் ஆணையரகம் எல்லைக்கு உட்பட்ட மஹிந்திரா சிட்டி, ஜிஎஸ்டி சாலை சந்திப்பில் மறைமலைநகர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் லோகேஷ் காந்தி, காவலர் மோகன்ராஜ் ஆகியோர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் கடந்த 20ம் தேதி ஈடுபட்டிருந்தனர். அப்போது, பரனூர் சுங்கச்சாவடியில் இருந்து டாரஸ் லாரி ஒன்று போக்குவரத்து சிக்னலை பின்பற்றாமல் சென்றது.
இதையடுத்து, போக்குவரத்து போலீஸார் அந்த லாரியை தடுத்து நிறுத்த முயன்றும் அது நிற்காமல் சென்றது. இதையடுத்து, மறைமலைநகர் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன், லாரியை தடுப்புகள் வைத்து நிறுத்த முயன்றார். இதனால், லாரியின் வேகம் குறைந்தது. இதையடுத்து, உடனடியாக அவர் லாரியின் படியில் ஏறி லாரி ஒட்டுநரை மடக்கி பிடித்து லாரியை நிறுத்த முயன்றார்.
ஆனால், லாரி நிற்காமல் சுமார் 10 கி.மீட்டர் தூரம் வரை சென்றது. சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் படியிலேயே பயணித்தார். இறுதியில் லாரி ஜூனியர் குப்பண்ணா சந்திப்பை நெருங்கும் போது, அது ஒரு தடுப்பில் மோதி நின்றது. பொது மக்கள் உதவியுடன் போலீஸார் லாரியை ஓட்டிச் சென்ற திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் (35) என்பவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில், பரனூர் சுங்கச்சாவடியில் சம்பந்தப்பட்ட டாரஸ் லாரியை அதன் ஓட்டுநர் நிறுத்திவிட்டு கீழே இறங்கி செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது, சுபாஷ் லாரியில் ஏறி, கடத்திச் சென்றது தெரியவந்தது. இந்நிலையில், துணிச்சலுடன் செயல்பட்டு லாரியை விரட்டிச் சென்று பிடித்த சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன், உதவி ஆய்வாளர் லோகேஷ் காந்தி மற்றும் காவலர் மோகன்ராஜ் ஆகியோரை டிஜிபி சங்கர் ஜிவால் இன்று (மே 22) நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.