தினகரன் | கோப்புப் படம் 
தமிழகம்

திமுக முன்னாள் நிர்வாகி தெய்வச்செயலுக்கு துணை போன அனைவரையும் கைது செய்ய வேண்டும்: டிடிவி தினகரன்

செய்திப்பிரிவு

சென்னை: தெய்வச்செயலின் கொடுஞ்செயலுக்கு துணை போன அனைவரையும் கைது செய்து, அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பதை முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்: "காதலிப்பது போல நடித்து திருமணம் செய்து கொண்ட பிறகு திமுகவின் மூத்த நிர்வாகிகளுக்கு தன்னை இரையாக்க முயற்சிப்பதாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த திமுக இளைஞரணி முன்னாள் நிர்வாகி தெய்வச்செயல் என்பவர் மீது காவல்துறையில் வழங்கப்பட்ட புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பாதிக்கப்பட்ட பெண் ஆளுநர் மாளிகை வரை சென்றிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தன்னை வழக்கறிஞராகவும், திமுகவில் செல்வாக்கு மிக்கவராகவும் காட்டிக் கொண்ட திமுக இளைஞரணியின் முன்னாள் நிர்வாகி தெய்வச்செயலின் மூலமாக ஏற்கனவே பல பெண்கள் மோசடிக்கு உள்ளாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியிருப்பது, தமிழகத்தில் மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம் அரங்கேறியிருக்கிறதோ என்ற அச்சம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

திமுகவைச் சேர்ந்த தெய்வச்செயல் செய்த மோசடிச் செயல்கள் குறித்து தகுந்த ஆதாரங்களுடன் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார்கள் அனைத்தும் பொதுவெளியில் பகிரப்பட்டிருப்பது காவல்துறை மீதான பெண்களின் நம்பிக்கையை அடியோடு சீர்குலையச் செய்திருக்கிறது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின், திமுக இளைஞரணியின் முன்னாள் நிர்வாகி மீது இதுவரை சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முன்வராதது பொது மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இளம் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் திமுக நிர்வாகி தெய்வ செயலின் கட்சி பொறுப்பை பறித்ததோடு நிறுத்திவிடாமல், இத்தகைய கொடுஞ்செயலுக்கு துணை போன அனைவரையும் கைது செய்து, முழுமையாக விசாரித்து குற்றம் உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT