மதுரை: அரசு போக்குவரத்து கழக உதவி பொறியாளருக்கு தொமுச நிர்வாகியின் கடிதத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட இடமாறுதலுக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஆர்.பாலாஜி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் 2015-ல் உதவி பொறியாளராக பணியில் சேர்ந்தேன். கடந்த 2022-ல் விருதுநகரில் பணிபுரிந்த போது, பேருந்தில் பயணி தவறவிட்ட பொருட்களை கண்டுபிடித்து உரிய பயணியிடம் போலீஸார் முன்னிலையில் திரும்ப வழங்கினேன்.
இதையடுத்து அதிகாரிகளை மதிக்காமல் செயல்பட்டதாக கூறி எனக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது. பின்னர் என்னை பணியிடை நீக்கம் செய்தனர். பணியிடை நீக்கத்தில் இருந்த போது விருதுநகரில் இருந்து மதுரை மண்டலத்துக்கு இடமாறுதல் செய்தனர். இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் எனக்கு எதிரான குற்றச்சாட்டு குறிப்பாணை மற்றும் பணியிடை நீக்கத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இடமாறுதல் உத்தரவை ரத்து செய்யவில்லை. இதனால் மதுரை மண்டலத்தில் பணியில் சேர்ந்த நிலையில் என்னை மீண்டும் விருதுநகருக்கு மாற்றினர். உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ விடுப்புக்கு விண்ணப்பித்த நிலையில் என்னை மதுரை எல்லீஸ்நகர் கிளைக்கு இடமாறுதல் செய்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்ட மேலாண்மை இயக்குனர் 5.5.2025-ல் உத்தரவிட்டுள்ளார். நான் பத்தாண்டு பணிக்காலத்தில் 8 முறை இடமாறுதல் செய்யப்பட்டுள்ளேன்.
தற்போது நிர்வாகக் காரணங்களுக்காக இடமாறுதல் அளிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் என்னை விருதுநகர் மண்டலத்திலிருந்து திண்டுக்கல் மண்டலத்துக்கு இடமாறுதல் செய்யுமாறு போக்குவரத்து அமைச்சருக்கு விருதுநகர் மண்டல திமுக தொழிற்சங்கமான தொமுசவின் பொதுச் செயலாளர் ராஜாசெல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தின் அடிப்படையில் என்னை மதுரை மண்டலத்துக்கு இடமாறுதல் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தில் தெமுச நிர்வாகிகள் தலையீடு அதிகமாக உள்ளது. போக்குவரத்து கழக அதிகாரிகள் தொமுச நிர்வாகிகளின் விருப்பத்துக்கு ஆடும் பொம்மைகள் போல் செயல்படுகின்றனர். எனவே என்னை விருதுநகர் மண்டலத்திலிருந்து மதுரை மண்டலத்துக்கு இடமாறுதல் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதுவரை இடமாறுதல் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஆர்.விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் வீ.அஜய்கோஸ், ஏ.ராகுல் ஆகியோர் வாதிடுகையில், மனுதாரரை இடமாறுதல் செய்யக்கோரி போக்குவரத்து அமைச்சருக்கு தொமுச நிர்வாகி அனுப்பிய கடிதத்தின் நகலை தாக்கல் செய்தனர். இதையடுத்து மனுதாரர் இடமாறுதல் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.