குன்னூர்: இந்திய அணுசக்தி கழகத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் உடல் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
டாக்டர் ஸ்ரீனிவாசன் செப்டம்பர் 1955-ல் அணுசக்தித் துறையில் சேர்ந்தார். இந்தியாவின் முதல் அணு ஆராய்ச்சி உலையான அப்சராவின் கட்டுமானத்தில் டாக்டர் ஹோமி பாபாவுடன் இணைந்து வாழ்க்கையைத் தொடங்கினார். ஆகஸ்ட் 1959-ல், இந்தியாவின் முதல் அணு மின் நிலையத்தின் கட்டுமானத்திற்கான முதன்மை திட்டப் பொறியாளராக நியமிக்கப்பட்டார். 1967-ல், அவர் மெட்ராஸ் அணு மின் நிலையத்தின் தலைமை திட்டப் பொறியாளராகப் பொறுப்பேற்றபோது, அவரது தலைமை நாட்டின் அணுசக்தித் திட்டத்தை தொடர்ந்து வடிவமைத்தது. டாக்டர் ஸ்ரீனிவாசன் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல முக்கிய பதவிகளை வகித்தார்.
1974-ம் ஆண்டில், அவர் அணுசக்தி திட்ட பொறியியல் பிரிவின் இயக்குநராகவும், 1984-ல் அணுசக்தி வாரியத்தின் தலைவராகவும் ஆனார். இந்தப் பதவிகளில், நாடு முழுவதும் உள்ள அனைத்து அணுசக்தித் திட்டங்களின் திட்டமிடல், செயல்படுத்தல் மற்றும் செயல்பாட்டை அவர் மேற்பார்வையிட்டார். 1987ம் ஆண்டில், அவர் அணுசக்தி ஆணையத்தின் தலைவராகவும், அணுசக்தித் துறையின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
அதே ஆண்டில், அவர் இந்திய அணுசக்தி கழகத்தின் நிறுவனர்-தலைவராக ஆனார். அவரது தலைமையின் கீழ், 18 அணுசக்தி அலகுகள் உருவாக்கப்பட்டன - அவற்றில் ஏழு செயல்பாட்டில் இருந்தன. ஏழு கட்டுமானம் மற்றும் நான்கு திட்டமிடல் நிலையில் உள்ளன.
இந்தியாவின் அணுசக்தித் திட்டத்திற்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருது டாக்டர் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது. இவர் ஓய்வுக்கு பின்னர் ஊட்டியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார்.
தொடர்ந்து பல ஆண்டு காலமாக உடல் நலக் குறைவால் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், வயது மூப்பு காரணமாக அவர் கடந்த 20ம் தேதி காலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அஞ்சலி செலுத்தினார். மறைந்த விஞ்ஞானி சீனிவாசன் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் அறிவித்தார்.
இந்நிலையில், அவரது உடல் இன்று அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. ஊட்டியிலிருந்து அவரது உடல் வெலிஙட்னில் உள்ள மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தமிழக காவல்துறையினர் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அரசு உடலை உறவினர்கள் மின் மயானத்துக்கு கொண்டு சென்று தகனம் செய்தனர். இதில் அவரது துணைவியார் கீதா ஸ்ரீனிவாசன், மகள் சாரதா, மகன் ரகுவீர் உட்பட உறலினர்கள் கலந்து கொண்டனர்.