கோப்புப்படம் 
தமிழகம்

கண்டலேறு அணையிலிருந்து மீண்டும்  திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது

இரா.நாகராஜன்

திருவள்ளூர்: தெலுங்கு - கங்கை கால்வாய் மதகு சீரமைப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த கிருஷ்ணா நதி நீர், மீண்டும் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டு புதன்கிழமை இரவு பூண்டி ஏரியை வந்தடைந்தது.

தெலுங்கு- கங்கை திட்டத்தின் கீழ், சென்னையின் குடிநீர் தேவைக்காக ஜனவரி முதல் ஏப்ரல் வரை வழங்கவேண்டிய கிருஷ்ணா நதி நீரை வழங்கவேண்டும் எனக்கோரி, தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் மாதத்தில் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, சென்னை குடிநீருக்காக ஆந்திர மாநிலம் - கண்டலேறு அணையில் இருந்து, தெலுங்கு - கங்கை திட்ட கால்வாய் மூலம் கிருஷ்ணா நதி நீரை கடந்த மார்ச் 24-ம் தேதி ஆந்திர நீர்வளத்துறையினர் திறந்தனர்.

இந்நிலையில், கிருஷ்ணா நதி நீர் திறப்பை, தெலுங்கு - கங்கை கால்வாயில், ஆந்திர மாநிலம் - ஸ்ரீகாளஹஸ்தியில் மதகு சீரமைப்பு பணி மேற்கொள்வதற்காக ஏப்.19-ம் தேதி ஆந்திர நீர்வளத்துறையினர் நிறுத்தினர். இதனால், கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லைக்கு வருவது ஏப்.24-ம் தேதி, முற்றிலுமாக நின்றது. இச்சூழலில், தெலுங்கு-கங்கை கால்வாய் மதகு சீரமைப்பு பணி முடிவடைந்ததையடுத்து, மே 5-ம் தேதி மீண்டும் சென்னை குடிநீருக்காக கிருஷ்ணா நதி நீரை கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர நீர்வளத்துறையினர் , திறந்தனர்.

தொடக்கத்தில் விநாடிக்கு 500 கன அடி என, திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, கடந்த 19-ம் தேதி விநாடிக்கு 2,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர், 4 அல்லது 5 நாட்களில் தமிழக எல்லையான தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வரவேண்டிய நிலையில், 10 நாட்கள் தாமதமாக புதன்கிழமை காலை 7 மணிக்கு வந்தடைந்தது.

அவ்வாறு வந்த கிருஷ்ணா நதி நீர், 25 கி.மீ., தூரம் பயணித்து, நேற்று (மே 21) இரவு பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. கிருஷ்ணா நதி நீர் வியாழக்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 115 கன அடி என, பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.

SCROLL FOR NEXT