தமிழகம்

மீனவ குடும்பங்களுக்கு ரூ.8,000 மீன்பிடி தடை கால நிவாரணம் வழங்கல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் உள்ள 1.75 லட்சம் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடை கால நிவாரணமாக தலா ரூ.8,000 வழங்கும் திட்டத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீ்ன்பிடி தடை காலம் அமல்படுத்தப்படுகிறது. மீன்வளத்தை பெருக்கும் நோக்கில், இந்த நாட்களில் விசைப்படகுகள், இழுவை படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் வரையிலான 14 கடலோர மாவட்டங்களில் மொத்தம் 15 ஆயிரம் விசைப்படகுகள், இழுவை படகுகள் கடலுக்கு செல்வது இல்லை.

இதன் காரணமாக, மீன்பிடிப்பில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பை சார்ந்து வாழும் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதால் மீன்பிடி தடை கால நிவாரணம் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் இந்த நிவாரண தொகை ரூ.5,000-ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.

அந்த வகையில், தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.75 லட்சம் கடல் மீனவ குடும்பங்களுக்கு, மீன்பிடி தடை கால நிவாரணமாக தலா ரூ.8 ஆயிரம் வழங்குவதற்காக, தமிழக அரசு ரூ.140.07 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிலையில், சென்னை நந்தனத்தில் உள்ள மீன்வளம், மீனவர் நலத் துறை ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீன்வள துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று, சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய 3 கடலோர மாவட்டங்களை சேர்ந்த தலா 10 பேருக்கு மீன்பிடி தடை கால நிவாரண தொகையை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கும் வகையிலான ஆணைகளை வழங்கினார். மீன்வள துறை செயலர் ந.சுப்பையன், துறை ஆணையர் இரா.கஜலட்சுமி மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT