தமிழகம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110 அடியை கடந்தது: நீர்வரத்து 12,819 கனஅடியாக அதிகரிப்பு

த.சக்திவேல்

மேட்டூர்: காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று (மே.21) விநாடிக்கு 12,819 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 110.03 அடியாக உயர்ந்துள்ளது

காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழையின் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 6 நாட்களாக அதிகரித்து வருகிறது. அதன்படி, 16-ம் தேதி 3,306 கன அடியும், 17-ம் தேதி 3,479 கன அடியும், 18-ம் தேதி 4,764 கன அடியும், 19-ம் தேதி 6,233 கன அடியும், நேற்று (மே.20) விநாடிக்கு 9,683 கன அடியாக இருந்த நிலையில் இன்று (மே.21) விநாடிக்கு 12,819 கன அடியாகவும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109.33 அடியில் இருந்து, இன்று காலை 110.03 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 77.46 டிஎம்சியிலிருந்து, இன்று 78.45 டி.எம்.சியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து பல மடங்கு அதிகரித்து இருப்பதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

கடந்த 3 நாட்களில் அணை நீர்மட்டம் 1.51 அடியாகவும், நீர் இருப்பு 2.13 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் முழு கொள்ளளாவான 120 அடியை விரைவில் எட்ட வாய்ப்புள்ளது. எனவே, நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி கரையோர பகுதிகள் மற்றும் அணைக்கு வரும் நீரின் அளவை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT