சென்னை: தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த 4-5 நாட்களில் தொடங்கும் என வானிலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா, வட தமிழக பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதுதவிர, தெற்கு கர்நாடக உள்பகுதிகள், அதை ஒட்டியுள்ள பகுதிகளின்மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வரும் 26-ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி: கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் இன்று (மே 21) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, அதே பகுதிகளில் 22-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக் கூடும்.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த 4 முதல் 5 நாட்களில் தொடங்க வாய்ப்பு உள்ளது. அதேநேரம், தமிழகத்தில் சில பகுதிகளிலும் மழை பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வரும் 24-ம் தேதி வரை சூறாவளி காற்று வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.