தமிழகம்

“தமிழகத்தில் திராவிட கட்சிகளால் தேசிய கட்சிகளை தவிர்க்க முடியாது” - கார்த்தி சிதம்பரம் 

டி.ஜி.ரகுபதி

கோவை: தமிழகத்தில் தேசியக் கட்சிகளை தவிர்த்துவிட்டு, திராவிடக் கட்சிகள் அரசியல் செய்ய முடியாது என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கோவையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் 1967-ம் ஆண்டுக்கு பின்னர் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. தமிழகத்தில் காங்கிரஸ் ஏன் வலுவான அரசியல் கட்சியாக இல்லை என்பதற்கு பல காரணங்கள் உண்டு. தமிழகத்தில் இண்டியா கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை.

எதிரணியில் இருக்கக்கூடிய அதிமுகவை குறைத்து மதிப்பிட கூடாது. அக்கட்சி தற்போது பாஜகவோடு கூட்டணி வைத்துள்ளது. அதை அதிமுக அடிமட்ட தொண்டர்கள் விரும்பவில்லை. நடிகர் விஜய் இப்போதுதான் கட்சி தொடங்கியுள்ளார். அது ஆக்கப்பூர்வமான அரசியல் கட்சியாக மாறி தேர்தலை சந்தித்தால்தான் தெரியும்.

என்னை பொறுத்தவரை தமிழகத்தில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சிக்கும் வாய்ப்பு கிடைத்தால் ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். தமிழகத்தை பொறுத்தவரை தேசியக் கட்சிகளை தவிர்த்துவிட்டு திராவிடக் கட்சிகள் அரசியல் செய்ய முடியாது. ஏதாவது ஒரு தேசியக் கட்சியுடன் இணைந்தால்தான் திராவிடக் கட்சிகளுக்கு வாக்கு வங்கி பலமாக இருக்கிறது.

பஹல்காம் தாக்குதலை யாரும் சாதாரணமாக பார்க்கக் கூடாது. அதில், இந்திய அரசு எடுத்த நடவடிக்கையை வரவேற்கிறேன். இந்த தாக்குதலில் நடந்தது என்ன என்பது குறித்து நாடாளுமன்றத்தை கூட்டி அறிவிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT