சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்ததில், அதிலிருந்த ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பேர் தண்ணீர் மூழ்கினர். அவர்களை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர். 
தமிழகம்

சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்து: குழந்தை உட்பட 5 பேர் மூழ்கினர்

சு.கோமதிவிநாயகம்

தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 5 பேர் தண்ணீரில் மூழ்கினர். அவர்களை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.

சாத்தான்குளம் அருகே வெள்ளாளன் விளையில் உள்ள தூய பரிசுத்த ஆலய பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. இதற்காக கோயம்புத்தூரில் இருந்து சைனி கிருபாகரன் உள்ளிட்ட 8 பேர் இன்று காலை ஆம்னி காரில் புறப்பட்டு வந்தனர். காரை மோசஸ் (50) என்பவர் ஓட்டினார்.

மாலை 4 மணியளவில் சாத்தான்குளம் அருகே சிந்தாமணிக்கும் மீரான்குளத்துக்கும் இடையே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் வலதுபுறம் இருந்த தடுப்புச்சுவர் இல்லாத கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் சுதாரித்த காரில் இருந்த சைனி கிருபாகரன், ஜெரின் எஸ்தர் ஆகிய 2 பேர் காரின் கதவை திறந்து வெளியே குதித்து காயமின்றி தப்பினர். இதில், மோசஸ், அவரது மனைவி வசந்தா, அவரது மகன் ஹெர்சோம், ஜெயபால் மகன் ரவி கோயில் பிச்சை, அவரது மனைவி லெட்ரியா கிருபா, ஹெர்சோம் மகனான ஒன்றரை வயது ஸ்டாலின் ஆகியோர் காருடன் கிணற்றுக்குள் விழுந்தனர்.

கார் கிணற்றுக்குள் பாய்ந்ததை பார்த்த கிராம மக்கள் உடனடியாக சாத்தான்குளம் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஹெர்சோமை கிராம மக்கள் மீட்டனர். தகவல் அறிந்து சாத்தான்குளம், நாங்குநேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி தண்ணீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

கிணறு சுமார் 50 அடி ஆழம் கொண்டது என்பதால், சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக தேடியும் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ஜேசிபி இயந்திரங்கள் வரவழைத்து தேடும் பணி நடந்து வருகிறது. ஆனால், அதனாலும் முடியாததால், தூத்துக்குடி முத்துக்குளி வீரர்கள் வரவழைக்கப்பட்டு தேடும் பணி நடக்கிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT