தமிழகம்

இந்திய ராணுவத்துக்கு தலைவணங்குகிறேன்: நடிகர் கமல்​ஹாசன் உருக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: துணிச்சலோடும், உறுதியோடும், கடமை உணர்வோடும் பணியாற்றிய இந்திய ராணுவத்துக்கு தலைவணங்குகிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் உருக்கத்துடன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் சமூகவலைத்தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: துப்பாக்கி சத்தம் மவுனமாகி அமைதி நிலவும் சூழலில், நாட்டு மக்களின் அமைதிக்காக தங்கள் இன்னுயிரை தந்தவர்களை கவுரவிக்கும் தருணம். இது. ஆபத்து நிறைந்த சூழலில் துணிச்சலோடும், கடமை உணர்வோடும், உறுதியோடும் பணியாற்றிய இந்திய ராணுவத்துக்கு தலைவணங்குகிறேன்.

நீங்கள்தான் இந்தியாவின் கவுரவம். இந்திய மக்கள் குறிப்பாக, ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், குஜராத் மக்களின் எதிர்ப்புணர்வு அசாதாரணமானது. நீங்கள் உயர்ந்து நிற்கின்றீர்கள். உங்களால் இந்திய நாடு பெருமை அடைகிறது.

சோதனை மிகுந்த இந்த காலகட்டத்தில் மாநிலங்களில் மொழிகளை கடந்து, சித்தாந்தங்களைகடந்து இந்தியாவின் ஒற்றுமை உணர்வையும், எழுச்சி உணர்வையும் கண்டோம்.

பயங்கரவாதத்துக்கு முன் இந்தியா ஒருபோதும் மண்டியிடாது என்ற உறுதியான செய்தியை தனது உறுதியான நடவடிக்கையால் உலகிற்கு எடுத்துச்சொன்ன இந்திய அரசை பாராட்டுகிறேன். நாம் அடைந்துள்ள வெற்றி நம்மை விழிப்போடு இருக்கச் செய்ய வேண்டும்.

இது வெற்றியை கொண்டாடும் நேரம் அல்ல. மாறாக வலிமையான இந்தியாவை மேலும் வலுப்படுத்தவும், மறுகட்டமைப்பு செய்யவும், உகந்த தருணம் ஆகும். இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT