தமிழகம்

ராயப்பேட்டையில் ரூ.12.37 கோடியில் பல்நோக்கு மையம்: திட்டப் பணிகளை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய திருமணக் கூடத்துடன் ரூ.12.37 கோடியில் புதிய பல்நோக்கு மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான திட்டப்பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதியில் ரூ.15.61 கோடி மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு மையம், 2 புதிய முதல்வர் படைப்பகங்கள் மற்றும் நூலகங்களை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

அதன்படி ரூ.12.37 கோடி மதிப்பீட்டில் 15,408 சதுர அடி கட்டிட பரப்பளவில், தரைத்தளம் மற்றும் 3 தளங்களுடன் கூடிய புதிய பல்நோக்கு மையம் சென்னை ராயப்பேட்டை பைகிராஃப்ட் சாலையில் அமைக்கப்பட உள்ளது.

இந்த பல்நோக்கு மையத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய 224 இருக்கைகள் கொண்ட திருமணக்கூடம், உணவருந்தும் இடம், தங்கும் அறைகள், வாகன நிறுத்துமிடம், லிப்ட் வசதிகள் உள்ளிட்டவை இடம்பெறும். திருவல்லிக்கேணி ஜானி பாட்ஷா தெருவில் உள்ள பொது நூலகத்தை மேம்படுத்தும் விதமாக ரூ.1.87 கோடி செலவில் 4,273 சதுர அடியில் தரைத்தளம் மற்றும் 2 தளங்களுடன் கூடிய புதிய முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன பொது நூலகம் அமைக்கப்பட உள்ளது.

அதேபோல் திருவல்லிக்கேணி பாரதி சாலையில் உள்ள பொது நூலகத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.1.37 கோடியில் 2,420 சதுர அடியில் தரைத்தளம் மற்றும் 2 தளங்களுடன் கூடிய புதிய முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன பொது நூலகம் அமைக்கப்பட இருக்கிறது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற உள்ள 3 புதிய திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சேப்பாக்கம் சைடோஜி தெரு மற்றும் டி.பி.கோயில் தெருவில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.3.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணியாளர் குடியிருப்புகளையும், ரூ.1.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பணியாளர்களுக்கான 12 குடியிருப்புகளையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து, வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை பயனாளிகளிடம் வழங்கினார்.

இந்நிகழ்வுகளில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்பி, மேயர் பிரியா, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் சு.பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT