எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம் 
தமிழகம்

‘போர்ச் சூழலில் எனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்திடுக’ - இபிஎஸ்

மார்கோ

சென்னை: “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு, ஒரு தேசமாக நாம் அனைவரும் துணை நிற்க வேண்டிய தருணம் இது. இச்சூழலில், எதிர்வரும் எனது பிறந்த நாளை முன்னிட்டு, கட்சியினர் என்னை நேரில் வந்து சந்திப்பதையும், எந்தவிதமான கொண்டாட்டங்களையும் தவிர்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்வினையாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடத்திய பிறகு, இந்தியாவின் பல நகரங்களைத் தாக்குவதற்கு பாகிஸ்தான் முற்பட்ட நிலையில், அதனை முறியடித்து நம் நாட்டு மக்களைக் காத்து வரும் மேன்மைமிகு ராணுவப் படைகளுக்கு எனது இதயமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு, ஒரு தேசமாக நாம் அனைவரும் துணை நிற்க வேண்டிய தருணம் இது. இச்சூழலில், எதிர்வரும் எனது பிறந்த நாளை முன்னிட்டு, என் உயிருக்கும் உயிரான தொண்டர்கள், என்னை நேரில் வந்து சந்திப்பதையும், எந்தவிதமான கொண்டாட்டங்களையும் தவிர்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அதேசமயம், எளியோர்களுக்கான ரத்த தானங்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட சமூக நலச் செயல்பாட்டு நிகழ்வுகளை மட்டும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நமக்காக எல்லையில் போர் புரியும் நம் ராணுவ வீரர்கள் நலமுடன் இருக்கவும், வெற்றி பெற்றிடவும், திருக்கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT