தமிழகம்

விவசாயிகளுக்கு ரூ.1,000 கோடி கடனுதவி: பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரூ.1,000 கோடி வரை விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

மாதவரம் பால் பண்ணையில் உள்ள ஆவின் திறன் மேம்பாட்டு மைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆவின் கால்நடை சேவை மையத்தை பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று திறந்து வைத்தார்.

தொடர்ந்து, பால் உற்பத்தியாளர்கள் கறவைகளுக்கு தேவையான அவசரகால சிகிச்சை உதவிகள் பெற மற்றும் மருத்துவ ஆலோசனை பெற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுடன் கூடிய ‘பாரத் சஞ்சீவனி’ செயலியை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பால்வளத்துறை உள்பட அனைத்து துறைகளிலும் திமுக அரசு சரித்திர சாதனைகளை படைத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, கால்நடைகளுக்கான சிகிச்சைக்கு மருத்துவர்களை தேடி விவசாய பெருமக்கள் செல்வதை தவிர்த்து, இந்த மையத்தை தொடர்புகொண்டு சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தரமான பால் கொடுக்கும் விவசாயிகளுக்கு ஒரு சதவீத ஊக்கத்தொகை கொடுக்கப்படுகிறது. குறைந்த வட்டியில் கடன் தொகை வழங்கப்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சுமார் ரூ.1,000 கோடி வரை விவசாயிகளுக்கு கடன் வழங்கி இருக்கிறோம்.

தமிழக வரலாற்றில் 38 லட்சம் லிட்டர் ஆவின் பால் கொள்முதல் திமுக ஆட்சியில்தான் செய்யப்பட்டது. ஆவின் பெரிய கட்டமைப்பு உள்ள நிறுவனம். லட்சக்கணக்கான பணியாளர்கள் உள்ளார்கள். எந்த சூழலிலும் விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது. மக்களுக்கு முறையாக பொருட்கள் சென்றுசேர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

இந்த கால்நடை சேவை மையத்தை ‘1800 4252 577’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினர் சுதர்சனம், கால்நடைத்துறை அரசு செயலர் ந.சுப்பையன், ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் அண்ணாத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT