சென்னையில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் நேற்று கருமேகங்கள் சூழ்ந்து பரவலாக மழை பெய்தது. கிண்டி மேம்பால பகுதியில் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி செல்லும் வாகனங்கள். | படங்கள்: எஸ்.சத்தியசீலன் | 
தமிழகம்

கத்திரி வெயில் தொடங்கிய நாளில் சென்னை, புறநகரை குளிர்வித்த கோடைமழை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் நேற்று கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், அதை தணிக்கும் விதமாக நேற்று மாலை பலத்த காற்றுடன் கோடை மழை பெய்து சென்னை புறநகரை குளிர்வித்தது. தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்தே வெயில் வாட்டி, வதைத்து வருகிறது. இருப்பினும் இடையிடையே, ஆங்காங்கே கனமழையும் பெய்து வருகிறது.

சென்னை, புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக வெப்பம் அதிகரித்து வந்தது. பொதுமக்கள் வெயிலுக்கு பயந்து, வெளியில் செல்வதை தவிர்த்து வந்தனர். மாநகராட்சி சார்பில் 20-க்கும் மேற்பட்ட போக்குவரத்து சிக்னல்களில், வெயிலின் தாக்கத்தில் இருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க பசுமை நிழற்பந்தல்களை அமைத்துள்ளது.

அரசியல் கட்சிகள் சார்பில் ஆங்காங்கே கடந்த ஒரு மாதமாக நீர் மோர் பந்தல்கள் அமைத்து, பொதுமக்களுக்கு எலுமிச்சை பழச்சாறு, ரோஸ் மில்க், மோர், வெள்ளரிக்காய், தர்பூசணி பழம், இளநீர் போன்றவற்றை வழங்கி வந்தன. இதற்​கிடை​யில், நேற்று அக்னி நட்​சத்​திரம் எனப்​படும் கத்​திரி வெயிலும் தொடங்​கியது.

வரும் மே 28-ம் தேதி வரை நீடிக்​கும் கத்​திரி வெயில் காலத்​தில், சென்​னை, புறநகரில் மேலும் வெப்​பம் அதி​கரிக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​பட்​டது. அதே​போல, நேற்று சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் 100 டிகிரி ஃபாரன்​ஹீட் வெப்பநிலை பதி​வானது. இந்​நிலையில் மாலை​யில் சென்னை மாநகரில் திடீரென சேப்​பாக்​கம், திரு​வல்​லிக்​கேணி, மயிலாப்​பூர், ராயப்​பேட்​டை, எழும்பூர், சிந்​தா​திரிப்​பேட்​டை, சைதாப்​பேட்​டை, கோடம்​பாக்​கம், நுங்​கம்​பாக்​கம், கிண்​டி, கோயம்​பேடு, அண்​ணாநகர், கீழ்ப்பாக்​கம், பெரம்​பூர், மாதவரம், கொடுங்​கையூர், தண்​டை​யார்பேட்​டை, ராயபுரம், திருவொற்​றியூர், திரு​வான்​மியூர், தரமணி ஆகிய பகு​தி​களில் பரவலாக, பலத்த காற்​று, இடி, மின்​னலுடன் கூடிய மித​மான மழை பெய்​தது.

நீட் தேர்வு மாணவர்கள் பாதிப்பு: மேலும் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, ஆவடி, தாம்பரம், வண்டலூர், பல்லாவரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக சில இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தன. திருவொற்றியூர், ஆவடி உள்ளிட்ட சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சில இடங்களில் மின் வெட்டு காரணமாக, இருளில் மூழ்கிய அறைகளில் மாணவர்கள் நீட் தேர்வை எழுதும் நிலை ஏற்பட்டது.

சென்னை, புறநகரில் கத்திரி வெயில் காரணமாக காலையில் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலையில் பெய்த மழை, மாநகர், புறநகரை குளிர்வித்தது. இது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT