எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம் 
தமிழகம்

சோழிங்கநல்லூர் தொகுதியின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் மே 7ல் ஆர்ப்பாட்டம் - இபிஎஸ்

செய்திப்பிரிவு

சென்னை: சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் வாழும் மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகள் நிறைவேற்ற வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் பென்ஜமின் தலைமையில் வரும் மே 7ம் தேதி, அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நிர்வாகத் திறனற்ற பொம்மை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான, கடந்த 48 மாதகால திமுக ஆட்சியில் மக்களுக்குப் பயன்தரும் திட்டங்கள் எதையும் நிறைவேற்றாமல், அரசு நிதிகள் சுயநலத்தோடு பல்வேறு வகைகளில் வீணடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதேபோல், மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமலும், பல்வேறு வரிச் சுமைகளை மக்கள் மீது சுமத்தியும், சர்வாதிகாரப் போக்கோடு இந்த அரசு செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்

அந்த வகையில், சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் வாழும் மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள சாலைகளை புதுப்பித்தல் மற்றும் புதிய சாலை வசதிகளை ஏற்படுத்தாத காரணத்தால் மக்கள் சிரமப்படுகின்றனர். வீராங்கல் ஓடையில் உள்ள குப்பைகள் தூர் வாரப்படாமல் இருப்பதாலும், தொகுதிக்கு உட்பட்ட பல இடங்களில் குப்பைகள் சரிவர அள்ளப்படாத காரணத்தாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

குடிநீர் வசதி முழுமையாக ஏற்படுத்தித் தரவில்லை. இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொகுதிக்கு உட்பட்ட இடங்களில், முறையாக தடுப்புகள் அமைக்காமல் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக, பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதால், மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். பொது சுகாதார மையங்களில் பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்கு, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் போதிய மருந்துகள் இல்லாத காரணத்தால் சிகிச்சை பெறுவதற்காக வருகைதரும் மக்கள் அவதியுறுகின்றனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, அம்மா உணவகங்களில் உணவு தயார் செய்வதற்குத் தேவையான பொருட்கள் வழங்கப்படாத காரணத்தால், அம்மா உணவகங்களில் முறையாக உணவு வழங்கப்படுவதில்லை.கல்லுக்குட்டை, கே.பி.கே. நகர், துரைப்பாக்கம், பாண்டியன் நகர், கெனால் பகுதி ஆகிய இடங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வாங்கித் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து, இதுவரை பட்டா வழங்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். புழுதிவாக்கம், ஜல்லடியன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பூர்வீகமாக குடியிருக்கும் மக்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.

தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் வசிக்கும் குடியிருப்புதாரர்களுக்கு கிரயப் பத்திரம் வழங்காமல், அதற்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்படுவதால் அப்பகுதி வாழ் மக்கள் மிகுந்த வேதனையுடன் உள்ளனர். கருணாநிதி நகர் பகுதியில் சொத்து வரி பெயர் மாற்றம் செய்து தராமல் அலைக்கழிக்கப்படுவதால் மக்கள் மிகுந்த அவதியுறுகின்றனர்.

பள்ளிக்கரணை வேளச்சேரி பிரதான சாலையை அகலப்படுத்தும் பணி சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதில் சிறிதும் அக்கறை இல்லாமல் இருந்து வரும், திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நிலையில், சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாமலும், மக்களின் பல்வேறு அத்தியாவசிய கோரிக்கைகளை நிறைவேற்றாமலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்காமலும் இருந்து வரும் திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தர வலியுறுத்தியும், அதிமுக சென்னை புறநகர் மாவட்டத்தின் சார்பில், மே 7ம் தேதி புதன் கிழமை காலை 9.30 மணியளவில், பள்ளிக்கரணை பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகக் கட்டடம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், முன்னாள் அமைச்சர் பா. பென்ஜமின் தலைமையில் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நிர்வாகத் திறனற்ற விடியா திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT