தமிழகம்

அமெரிக்காவில் தமிழக மாணவர்களுடன் அண்ணாமலை கலந்துரையாடல்

செய்திப்பிரிவு

சென்னை: இந்தியா கொள்கை மற்றும் பொருளாதார ஆராய்ச்சி குறித்து அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துரையாடினார்.

தமிழக பாஜகவின் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு, புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில தலைவர் மாற்றத்துக்கு பிறகு அண்ணாமலை பல்வேறு பயணங்களை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, கடந்த 14-ம் தேதி ஆன்மிக பயணமாக அண்ணாமலை இமயமலை சென்றார். இமயமலையில் ஸ்ரீ ஸ்ரீ மகாவதார் பாபாஜி குகையில் தியானம் செய்தார். 3 நாள் ஆன்மிக பயணத்துக்கு பிறகு மீண்டும் சென்னை திரும்பினார். பின்னர், கட்சியின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட அவர், கடந்த 23-ம் தேதி அமெரிக்கா சென்றார்.

அமெரிக்காவில், கலிபோர்னியா மாகானத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில், ‘ஸ்டான்போர்ட் இந்தியா மாநாடு 2025’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் பங்கேற்று கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உயர் நிர்வாகிகளுடன் முக்கியமான கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

இந்நிலையில், நேற்று அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில், இந்தியா கொள்கை மற்றும் பொருளாதார ஆராய்ச்சி குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடி உள்ளார். இந்த கலந்துரையாடலில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் கொள்கை மாற்றங்கள் குறித்த மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அண்ணாமலை விளக்கமாக பதில் அளித்தார்.

SCROLL FOR NEXT