`வெள்ளுடை வேந்தர்' சர்.பிட்டி. தியாகராயர் 174-வது பிறந்தநாளை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்துக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் ஆர்.பிரியா, பிரபாகரராஜா எம்எல்ஏ, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 
தமிழகம்

174-வது பிறந்தநாள் கொண்டாட்டம் | சர். பிட்டி. தியாகராயர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை

செய்திப்பிரிவு

சென்னை: சர்.பிட்டி. தியாகராயரின் 174-வது பிறந்தநாளையொட்டி, சென்னை ரிப்பன் மாளிகையில் அவரது படத்துக்கு தமிழக அரசு சார்பில் மலர் தூவி மரியாதை செலுப்பட்டது.

திராவிட இயக்கத்தின் முன்னோடியும், நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவருமான ‘வெள்ளுடை வேந்தர்’ சர்.பிட்டி தியாகராயர் கடந்த 1852-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி பிறந்தார். சமூகநீதி காக்கவும், தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்காகவும் இவர் பாடுபட்டார். இவரது 174-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, சென்னை மாநகராட்சி அலுவலக வளாகமான ரிப்பன் மாளிகையில் அவரது சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்ட உருவப் படத்துக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஏஎம்வி. பிரபாகரராஜா எம்எல்ஏ, சென்னை மாநகராட்சி ஆணைர் ஜெ.குமரகுருபரன், தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை செயலர் வே.ராஜாராமன், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு தியாகராயர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: கல்விக் கூடங்கள், தெரு விளக்குகள், குடிநீர் இணைப்பு, மதிய உணவு திட்டம் என சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவராக இருந்து, தன்னை தேடி வந்த முதல்வர் பொறுப்பை மறுத்த, மாண்பாளராக உயர்ந்தவர்.

எவருக்காகவும் தன் இயல்பை மாற்றிக் கொள்ளாத ‘வெள்ளுடை வேந்தர்’ என பெயரும் பெற்றவர். இன்றைய நம் திராவிட மாடல் ஆட்சிக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே வலுவான கொள்கை அடித்தளம் அமைத்த தியாகராயர் வழிநின்று தமிழகத்தின் உயர்வுக்கு உழைப்போம். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

சமூகநீதி காக்கவும், தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்காகவும் பாடுபட்ட சர் பிட்டி தியாகராயருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று அகில இந்திய தெலுங்கு தேவாங்கர் நலச் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT