கோவையில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி முகவர்களுக்கான இரண்டாம் நாள் பயிற்சி பட்டறை நிகழ்ச்சியில் பேசினார் கட்சித் தலைவர் விஜய். 
தமிழகம்

“மக்​கள் நன்​மைக்​காக எந்த நிலைக்​கும் செல்​லத் தயங்க மாட்​டோம்” - தவெக தலைவர் விஜய்

செய்திப்பிரிவு

கோவை: தவெக ஆட்சி சிறுவாணி நீரைப்போல தூய்மையானதாக இருக்கும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறினார். தவெக பூத் கமிட்டி முகவர்களுக்கான 2-ம் நாள் பயிற்சிப் பட்டறை கோவை எஸ்என்எஸ் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், கட்சித் தலைவர் விஜய் பேசியதாவது: தவெக அரசியல் ஆதாயத்துக்காக தொடங்கப்பட்ட கட்சி கிடையாது. சமரசம் என்ற பேச்சுக்கே எங்களிடம் இடமில்லை. மக்கள் நன்மைக்காக எந்த நிலைக்கும் செல்லத் தயங்க மாட்டோம்.

ஊழல் இருக்காது... தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது, குற்றவாளிகள் இருக்க மாட்டார்கள். அதனால், எவ்வித தயக்கமுமின்றி மக்களை சந்தியுங்கள். தவெக ஆட்சி கோவையின் சிறுவாணி நீரைப்போல தூய்மையானதாக அமையும். தெளிவான, உண்மையான, வெளிப்படையான ஆட்சியாக இருக்கும்.

இவற்றை மக்களிடம் கொண்டுசெல்லுங்கள். பண்டிகைகளைப்போல கொண்டாட்டமாக இந்தப் பணியை மேற்கொள்ளுங்கள். வெற்றியை அடைவதில் பூத் கமிட்டி முகவர்களின் செயல்பாடு முக்கியம். நம்பிக்கையுடன் இருங்கள், நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, நேற்று மாலை நிகழ்ச்சி நடைபெற்ற கல்லூரிக்கு, தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து பிரச்சார வேன் மூலம் ரோடு ஷோ நடத்தினார் விஜய். சாலையின் இருபுறத்திலும் கூடியிருந்த ஏராளமானோர் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

அதிக வாகனங்கள் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக கல்லூரி வளாகத்தை சென்றடைய 2 மணி நேரத்துக்கு மேலானது. முதல் நாள் நிகழ்வில் பிரச்சார வாகனத்தின் கதவு தொண்டர்கள் கூட்டத்தால் சேதமடைந்ததால் காரில் சென்றார். இரண்டாம் நாள் நிகழ்வில் வாகனத்தின் கதவு சரிசெய்யப்பட்டதால், அதில் பயணித்தார்.

SCROLL FOR NEXT