தமிழகம்

அரசியல் சாசனத்தை பாஜக அரசு சிதைத்து வருகிறது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: கடந்த ஓராண்டாக பல சட்டங்களை கொண்டு அரசியல் சாசனத்தை கொஞ்சம் கொஞ்சமாக பாஜக அரசு சிதைத்து வருகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் வழங்கறிஞர் பிரிவு சார்பில் அம்பேத்கர் 134-வது பிறந்தநாள் விழா சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: சுதந்திரத்தின்போது காங்கிரஸில் பல்வேறு சட்ட நிபுணர்கள் இருந்தனர். ஜவஹர்லால் நேரு, காந்தி, படேல், ராஜாஜி உள்ளிட்ட பல சட்ட நிபுணர்கள் இருந்தாலும் அரசியல் சாசனக் குழுவுக்கு தலைவராக அம்பேத்கரை தேர்ந்தெடுத்தனர்.

ஏழை, எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், பட்டியலினத்தவர்கள் மற்றும் பெண்களுக்கான உரிமைகளை மற்ற நாடுகள் சுதந்திரம் பெற்று பல்லாண்டு காலம் கழித்துதான் போராடி வாங்கினர். ஆனால், இந்தியா குடியரசு ஆன முதல் நாளே அனைத்து மக்களுக்கும் உரிமை என அரசியல் சாசனத்தில் எழுதியது அம்பேத்கர் தான்.

பாஜக மட்டும் 400 இடங்களில் வெற்றி பெற்றிருந்தால் அரசியல் சாசனத்தை தகர்த்தெறிந்திருப்பார்கள். ஆக்கிரமிப்பு என்ற பெயரில் புல்டோசரை கொண்டு வீடுகளை எப்படி இடிக்கிறார்களோ, அதேபோல் ஒரே வாரத்தில் அரசியல் சாசனத்தை தகர்த்து புதிய குடியரசு நிறுவி, புதிய அரசியல் சாசனத்தை பாஜக நிச்சயம் கொண்டு வந்திருக்கும். ஆனால், தேர்தலில் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை கூட பாஜகவுக்கு மக்கள் தரவில்லை. இதனால், அரசியல் சாசனத்தை காப்பாற்றி விட்டோம் என மக்கள் நினைக்கலாம்.

ஆனால், ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருக்கும் மோடி தலைமையிலான பாஜக அரசு அரசியல் சாசனத்தை தகர்க்க வேறு திட்டத்தை வரையறுக்கிறார்கள். அதாவது புல்டோசர் கொண்டு தானே தகர்க்க முடியாது. உளி, சுத்தியல் கொண்டு கடந்த ஓராண்டாக பல சட்டங்களை கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் சாசனத்தை சிதைக்கிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டம், வக்பு திருத்தச் சட்டம் ஆகியவை அவ்வாறு சிதைத்தது தான். இவ்வாறு அவர் பேசினார்.

அகில இந்திய காங்கிரஸ் வழங்கறிஞர் பிரிவு தலைவர் அபிஷேக் மனு சிங்வி பேசும்போது, ‘உலகில் சிறந்த கூட்டாட்சி கொண்ட அமெரிக்காவில் கூட மக்கள் தொகை அடிப்படையில் அல்லாமல், அனைத்து மாகாணங்களுக்கும் சம அளவாக தான் உரிமை உள்ளது. தொகுதி மறுவரையறை என்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.

அரசை செயல்படுத்துவதில் ஆளுநர் ஒரு தன்னிச்சையாக தேர்ந்தெடுக்கப்பட்டவராக செயல்படுகிறார்’ என்றார். நிகழ்ச்சியில், தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், செயலாளர் சூரஜ் எம்.என்.ஹெக்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT